கிளிநெச்சியில் கொரோனா வைத்தியசாலைக்கு எதிராக மகஜர் கையளிப்பு!

13
13

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையினை கொரோனா வைத்தியசாலையாக மாற்றும் முடிவினை மாற்றி பொருத்தமான வைத்தியசாலை ஒன்றை தெரிவு செய்யுமாறு அக்கராயன்குளம் பிரதேசத்தின் 15 க்கு மேற்பட்ட பொது அமைப்புக்கள் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரிடம் மனு ஒன்றை கையளித்துள்ளனர்.

இன்று காலை 10 மணிக்கு மாவட்டச் செயலகத்திற்கு சென்ற பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களின் கோரிக்கை மனுவினை மாவட்ட அரச அதிபரிடம் கையளித்தனர். மனுவைக் கையளித்த பின்னர் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது

‘கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா வைத்தியசாலை ஒன்று ஆரம்பிப்பதற்கு நாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் அதற்காக பொருத்தமான வைத்தியசாலை ஒன்றை தெரிவு செய்ய வேண்டும். அதனை விடுத்து 10,000 க்கு மேற்பட்ட பொது மக்கள் தங்களின் அடிப்படை மருத்துவத் தேவையினை பூர்த்தி செய்கின்ற 15 க்கு மேற்பட்ட கிராமங்களை கொண்ட ஒரு பிரதேசத்தின் வைத்தியசாலையினை தெரிவு செய்வது பொருத்தமற்றது.”மேலும் போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் அற்ற பிரதேசத்தின் ஒரு வைத்தியசாலையினை கொரொனாவைத்தியசாலையாகத் தெரிவு செய்திருப்பது அப்பிரதேச பொது மக்களை அவசர மற்றும் அடிப்படை மருத்துவ வசதிகள் இன்றிய நெருக்கடிகளுக்குள் இட்டுச் செல்வதாகும்.’

‘அத்தோடு அக்கராயனும் சுற்றயல் பிரதேசங்களும் ஒப்பிட்டளவில் மக்கள் அதிகளவாக செறிவாக வாழ்கின்ற பிரதேசம் என்பதோடுஇ பருவ மழைக்காலங்களில் அக்கராயன் பிரதேசத்திற்கு உள்வருவது மற்றும் வெளிச் செல்வது என்பது நெருக்கடி மிக்கதாகும். இதனால் பல சந்தர்ப்பங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலைமையும் கடந்த காலத்தில் ஏற்பட்டுள்ளது.’

‘எனவே மாவட்டத்திற்கான அல்லது மாகாணத்திற்கான கொரோனா வைத்தியசாலையை தெரிவு செய்கின்ற போது சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுடன் பேசி குறிப்பாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்இ மாவட்ட அரச அதிபர் பொது மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோருடன் கலந்துரையாடி தீர்வுகளை மேற்கொள்ள வேண்டும் மாறாக ஒரு சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு நிலையிலிருந்து முடிவுகளை மேற்கொள்வது. எதிர்காலத்தில் சமூகத்தில் பல் வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தும் எனவே எமது கருத்துக்களுக்கு செவிசாய்த்து பொருத்தமான முடிவுகளை மேற்கொள்ளுமாறு கோருகின்றோம்’ என அக்கராயன் பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ‘அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையினை கொரனா வைத்தியசாலையாக மாற்றும் முடிவு குறித்துத் தமக்கு எதுவும் தெரியாது அதுகுறித்து தம்முடன் எவரும் ஆலோசிக்கவில்லை’ எனக் கடந்த மாதம் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.