மட்டக்களப்பில் தேசிய உணவு உற்பத்தித் திட்டம் அதிகரிப்பு

07 1
07 1

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தின் சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தில் நெற்செய்கையும் மறுவயல் பயிர்ச்செய்கை உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கத்தின் ஆலோசனைக்கமைய மாவட்ட செயலகம் நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்புக்களின் சம்மேளன பிரதிநிதிகளுக்கிடையிலான விசேட சந்திப்பொன்று மாவட்ட செயலகத்தில் மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா தலைமையில் புதன்கிழமை 10ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த விசேட கூட்டத்தில் நெல் ஏனைய மறு வயல் பயிர்களை எதிர்காலத்தில் உற்பத்தி அதிகரிப்பதற்கு எடுக்கப்படவேண்டிய மேலதிக நடவடிக்கைகள் பற்றி ஆராயப்பட்டது.

இந்த விசேட சந்திப்பில் விவசாயிகள் தரப்பில் சிறுபோக நெல் அறுவடையின் பின்னர் இலகுவாக நெல் சந்தைப்படுத்தும் சபையினால் உரிய வேளைக்கு உத்தரவாத விலையில் நெல்லைக் கொள்வணவு செய்தல், தட்டுப்பாடின்றி இலவச மானிய உரத்தினை சகல பகுதி விவசாயிகளுக்கும் பெற்றுக் கொடுத்தல், சட்டவிரோத மண் அகழ்வினை தடைசெய்தல், காட்டுயானை தொல்லையிலிருந்து விவசாய நிலங்களைப் பாதுகாத்தல், தரமான விதைநெல்லை விவசாயிகளுக்குப் பெற்றுக் கொடுத்தல் போன்ற பல்வேறு விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மாவட்ட விவசாய சம்மேளன பிரதிநிதிகள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் முன்வைத்திருந்தனர்.

இப்பிரச்சினைகளைக் கேட்டறிந்த மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா விவசாயிகளின் கோரிக்கiளில் அதிகமானவற்றுக்கு உடனடித் தீர்வு வழங்கியதுடன் ஏனைய கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வினைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

இங்கு கருத்து வெளியிட்ட கலாமதி பத்மராஜா, மட்டக்களப்பு மாவட்டமும் உணவு உற்பத்தியில் கூடிய பங்கினைச் செலுத்தவேண்டியுள்ளது. எனவே மாவட்ட விவசாயிகள் எதிர்காலத்தில் கூடிய அக்கறையுடன் விவசாய நடவடிக்கைகளில் கவனஞ் செலுத்த வேண்டுமென்று குறிப்பிட்டார்.