அக்கராயன் வைத்தியசாலை கொரோனா சிகிச்சைக்கான மையமாக மாற்றமடைகிறது!

Divisional Hospital Akkarayanakulam
Divisional Hospital Akkarayanakulam

தேசிய பேரிடர் நிலைமையினை கருத்திற்கொண்டு மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலிற்கமைவாக அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை கொரோனா சிகிச்சைக்கான மையமாக மாற்றமடையவுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மத்திய சுகாதார அமைச்சு கொழும்பில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் பிரகாரம் ஏற்கனவே அறியத்தரப்பட்டதற்கமைய கொரோனா சிகிச்சை மையமாக அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையை ஸ்தாபித்தல் தொடர்பான கலந்துரையாடல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் நேற்று கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கிளிநொச்சி, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர், அக்கராயன்குளம் வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி, கிளிநொச்சி மாவட்ட இதர வைத்தியசாலைகளின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள், வைத்திய நிபுணர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் ஒருமித்த முடிவு எட்டப்பட்டது.

இதற்கான பூர்வாங்க செயற்பாடுகள் மத்திய சுகாதார மற்றும் மாகாண சுகாதார திணைக்களங்களின் அறிவுறுத்தலுக்கமைய உடனடியாகவே ஆரம்பிக்கப்பட்டது.

கொரோனா சிகிச்சை மையத்திற்கான நிர்வாக சேவைகள் யாவும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் கீழ் நடைபெறுவதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

இச்செயற்பாட்டின் ஊடாக அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையின் சேவைகள் யாவும் இடையறாது ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் இடம்பெறுவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.