இராணுவ மயமாக்கலால்; ஒடுக்கப்பட்டுள்ள இனவாதம் மீண்டும் உயிர்த்தெழும்!

3 er 1
3 er 1

இலங்கையில் இராணுவ மயமாக்கல் மீண்டும் ஏற்பட்டால் ஒடுக்கப்பட்டுள்ள இனவாதம் மீண்டும் உயிர்த்தெழும் என இந்திய இராணுவத்தின் ஓய்வுநிலை புலனாய்வு நிபுணரும் தெற்காசியாவில் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர்களுள் ஒருவருமான கேர்ணல் ஆர்.ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையில் படை அதிகாரிகள், நிருவாகம் மற்றும் இதர அரச கட்டமைப்புக்கள் ஆகியவற்றில் இணைக்கப்படுகின்றமை, ஜனாதிபதி செயலணிகளுக்குள் உள்வாங்கப்படுகின்றமை தொடர்பாக இலங்கையில் வெளியாகும் தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி கோட்டாபய ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தொடர்ச்சியாக முப்படை அதிகாரிகளை, நிர்வாகத்திலும் பல்வேறு உயர் பதவிகளில அமர்த்தி வருகிறார்.

மேலும் பல்வேறு நிர்வாகப் பிரிவுகளும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயற்பட்டு வருகின்றன. இதன் உள்நாட்டு மற்றும் சர்வதேச விளைவுகள் பற்றிய புரிதல் அவசியமாகின்றது.

இராணுவ மயமாக்கலுக்கான காரணம் இராணுவச் சேவை புரிபவர்கள் பொதுவாக சிவில் நிர்வாகத்தினர் சேவையில் கடமை, கண்ணியம் மற்றும் கட்டுபாடு மூன்றுமே கிடையாதென நம்புபவர்களாக இருக்கின்றார்கள்.முன்னாள் இராணுவ அதிகாரியான கோட்டாபயவும் இந்த நிலைப்பாட்டில் இருப்பவராக கொள்ளமுடியும்.

இதன்காரணமாகவே சிவில் நிருவாகத்தில் அதிகளவு பணம் புழங்கும் மகாவலி அபிவிருத்தித் துறை போன்றவற்றுக்கும் இராணுவ அதிகாரியை செயலாளராக நியமித்திருக்கலாம்.

ஆனால் ஏனைய சிவில் நிருவாகத்தில் படை அதிகாரிகளை உட்புகுத்துவது பற்றி அதிகளவில் கரிசனை கொள்ள வேண்டியுள்ளது.

குறிப்பாக இராணுவம் சிவில் நிர்வாகத்தில் ஈடுபடுத்தப்படுவதால், குறுகிய காலத்தில் நிர்வாக செயல் முறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் மக்களின் ஜனநாயக அடிப்படை உரிமைகளை பாதிப்படையச் செய்யும்.

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இவ்வாறு இராணுவத்தின் கைகள் நிருவாகத்தில் ஓங்கினால் தேர்தல் நெருங்கும்போது இராணுவத் தலைமையின் அழுத்தம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய சிங்கள- பௌத்த பேரினவாதத்தை ஊக்குவிக்கிறார் என்ற மனநிலை தமிழ் முஸ்லிம் மக்களிடையே நிலவுகிறது.

இந்த நிலையில் இராணுவ மயமாக்கலை வெவ்வேறு வடிவத்தில் அவர் தொடர்ந்தால் ஜனநாயகதுக்கு எதிர்மறை நிலையே தோற்றம்பெறும். அதுமட்டுமன்றி ஒடுக்கப்பட்டுள்ள இனவாதம் மீண்டும் உயிர்த்தெழும் என்பதில் ஐயமில்லை” என குறிப்பிட்டுள்ளார்.