சர்வதேச கண்காணிப்பாளர்கள் பொதுதேர்தலில் பங்கேற்பதில் சிக்கல்

7 d 2
7 d 2

9ஆவது பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள நிலையில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் பங்கேற்பதில் சிக்கலான நிலைமைகள் ஏற்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தும் எதிவரும் ஓகஸ்ட் முதலாம் திகதியே ஆரம்பமாகவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு ஏதுநிலைகள் காணப்படுகின்றன.

இருப்பினும் வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் இராஜதந்திரிகள் உள்ளிட்ட அனைவரும் கொரோனா பரிசோதனைக்குட்படுத்தப்படுவதோடு தனிமைப்படுத்தல் விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆகவே சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டுக்குள் வருகை தரும்போது அவர்களுக்கு கொரோனா சட்டம் விலக்களிக்கப்படாதிருக்குமாயின் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதில் சிக்கலான நிலைமைகளே உருவாகும்.

இதேவேளை, இம்முறை தேர்தல் கண்காணிப்பு பணிகளில் பொதுநலவாய அமைப்பு கண்காணிப்பாளர்கள், ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள், மற்றும் தென்கொரியாவைச் சேர்ந்த அன்பிறில் அமைப்பினைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் வருகை தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்டஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.

இந்த தரப்பினருடன் ஏற்கனவே ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ள நிலையில் அவர்கள் குறிப்பிட்ட சிலரையாவது அனுப்புவார்கள் என்று கூறிய அவர் அவ்வாறு சர்வதேச கண்காணிப்பாளர்கள் இல்லையென்றால் பாரியளவில் சட்டமீறல்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.