மட்டக்களப்பு வேட்பாளர்களின் விசேட கலந்துரையாடல்!

2 hh 0
2 hh 0

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களின் விசேட கலந்துரையாடல் நிகழ்வொன்று இன்றைய தினம் மட்டக்களப்பு தமிழரசுக் கட்சிக் காரியாலயத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய கி.துரைராசசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளர் இ.பிரசன்னா உட்பட மட்டக்களப்பு வேட்பாளர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம், முன்னாள் அரசாங்க அதிபர் மா.உதயகுமார், பொறியியலாளர் மு.ஞானப்பிரகாசம், இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன், சட்டத்தரணி ந.கமல்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது ஆகஸ்ட் 05ம் திகதி நடைபெற இருக்கின்ற தேர்தலில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், தேர்தல் பரப்புரைகள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும், தேர்தல் நாளிலும், வாக்குகள் எண்ணும் நேரங்களிலும் புதிய நடைமுறைகள் எவ்வாறு பின்பற்றப்படும், பரப்புரைக் காலத்தில் கூட்டங்கள் நடத்துவதற்கான வரையறைகள் மற்றும் கூட்டங்கள் நடத்த முடியாத சூழ்நிலைகளில் எவ்வாறு தங்கள் கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் மக்களை வாக்களிப்பதற்கு உற்சாகப்படுத்தல், அதே போன்று தேர்தல் நாளில் சமூக இடைவெளிகளைப் பேணுதல், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுதல், அத்தகு சுற்றாடலில் மக்கள் வாக்களிக்கும் முறை, மக்களின் தயக்கம் போன்ற விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

தேர்தல் விதிறைகளை மீறுகின்றவர்கள் சம்மந்தமாகவும், அது தொடர்பிலான முறைப்பாடுகளை மேற்கொள்வது சம்மந்தமாகவும், தேர்தல் அலுவலகங்களை அமைப்பது சம்மந்தமாகவும் இங்கு மேலதிகமாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.