அக்கராயன் கொரோனா வைத்தியசாலை தீர்மானத்திற்கு பொது அமைப்புகள் ஒருமித்து எதிர்ப்பு!

Photos3
Photos3

அக்கராயன் பிரதேச வைத்தியசாலையினை கொரோனா வைத்தியசாலையாக மாற்றும் அதிகாரிகளின் தன்னிச்சையான தீர்மானத்திற்கு பிரதேச பொது மக்கள் அமைப்புக்கள் தங்களின் கடுமையான எதிர்ப்பினை ஒருமித்து உறுதியாக தெரிவித்துள்ளனர்.

இன்று அக்கராயன் வைத்தியசாலையை கொரோனா வைத்தியசாலையாக மாற்றுவது குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கும் கலந்துரையாடல் கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் அக்கராயன் வைத்தியசாலையில் இடம்பெற்றது. இதன் போதே பொது மக்கள் அமைப்புகளினால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

உலகநாடுகளில் ஓரிரு வாரங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் கட்டி எழுப்பப்படுவதை சுட்டிக்காட்டிய மக்கள் பிரதிநிதிகள் ஏன் அவ்வாறு இலங்கை இராணுவ உதவியோடு சுகாதார அமைச்சினால் வைத்தியசாலையை அமைக்க முடியாது? எனக் கேள்வி எழுப்பிய பொது மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள்.

“இது மேலதிகாரிகளின் உத்தரவு. நாம் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்” என கூட்டத்தில் கலந்துகொண்ட சுகாதாரதுறையின் உயரதிகாரிகள் தெரிவித்த போதே “அவ்வாறு நீங்கள் நியாயம் கற்பிக்க முடியாது.

கொழும்பில் உள்ள உயரதிகாரிகளுக்கு இங்குள்ள நிலவரங்களை சரியாக எடுத்துச் சொல்லவேண்டியது இங்குள்ள அதிகாரிகளான உங்களது கடமை. அவர்கள் இந்த முடிவை மேற்கொள்ளுவதற்கு முன்னர் உங்களோடு கலந்தாலோசித்திருப்பார்களே.

அவ்வேளை இங்குள்ள நிலவரங்களை நீங்கள் கூறியிருக்கவேண்டும் இந்த மாவட்டத்தின் பணிப்பாளர் என்பவர் இந்த மாவட்ட மக்களின் பணிப்பாளர் எனவே அவர் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்.

எங்களின் கருத்துக்களை உங்களது உயரதிகாரிகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள் தவிர அவர்கள் சொல்வதை செய்கிறோம் என எம்மிடம் வந்து கூறமுடியாது ” முழுமையாக பயன்படுத்தப்படாதுள்ள ஒரு வளத்தை இவ்வாறு பெற்றுக்கொள்ள முனைந்தால் அதில் ஆட்சேபனை இல்லை ஆனால் முழுமையாக பயன்பாட்டில் உள்ள இன்னும் தேவைகள் நிறைந்துள்ள இந்த வைத்தியசாலையினை மாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாது நீங்கள் எங்களது கருத்துக்களை சுகாதாரதுறை உயரதிகாரிகளுக்கு எடுத்துச் செல்லத் தவறின் நாங்கள் பஸ் பிடித்து கொழும்புச் செல்ல நேரிடும் அல்லது வீதியில் இறங்க வேண்டி வரும் எனத் தெரிவித்த மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள்.

அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை எங்குள்ளது, எப்படியுள்ளது என்பது மத்திய சுகாதார துறையின் பணிப்பாளர் நாயகத்திற்கு தெரியாது எனவே இங்குள்ள யாரோ ஒரு அதிகாரிதான் சிபார்சு செய்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அதிகாரிகள் அக்கராயன் வைத்தியசாலையினை மாற்று இடத்திற்கு கொண்டு செல்லத் தீர்மானிக்கப்பட்டுள்ள இடமானது எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் காணப்படுகிறது.

குடிநீர், கழிவகற்றல் போதுமான இடவசதி என்பன அங்கில்லை. வெளிநோயாளர் பிரிவை மாத்திரம் இயங்க வைப்பதற்கு கூட போதுமான வசதிகள் இல்லை எனத் தெரிவித்தனர்.

நீண்டநேரம் நடந்த இந்த கலந்துரையாடலின் இறுதியில் “மக்களது ஒட்டுமொத்த எதிர்ப்பினை எமது உயரதிகாரிகளுக்கு எடுத்துச் சொல்கிறோம்” என மாவட்ட சுகாதாரதுறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்றைய கலந்துரையாடலில் அக்கராயன் வைத்தியசாலை பொறுப்பதிகாரி சேரலாதன், கிளிநொச்சி வைத்தியசாலை பணிப்பாளர் ராகுலன், மாவட்ட உளநல வைத்தியர் ஜெயராசா மற்றும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Photos1
Photos1
Photos3
Photos3
Photos4
Photos4
Photos8
Photos8