வாகனங்களை மீள கையளிக்க தீர்மானம்

8 CU
8 CU

கொவிட் -19 தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அமுலான ஊரடங்கு சட்டம் காலப்பகுதியில் காவற்துறையினரால் பொறுப்பேற்கப்பட்ட வாகனங்களை மீள உரிமையாளர்களிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அதற்காக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம் பதில் காவற்துறை மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்னவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, தாமரை கோபுர திட்டத்தை மிகவும் பயனுறுதி வாய்ந்த முதலீடாக உயர் நியமங்களுடன் நவீனமயப்படுத்தி நாட்டுக்கு வழங்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த திட்டத்துடன் இணைந்த முதலீட்டு திட்டங்கள் குறித்து உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு தெரியப்படுத்துவதை உடனடியாக ஆரம்பிக்குமாறும் அவர் பணித்துள்ளார்.

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மற்றும் தாமரை கோபுர திட்டத்தின் அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்துடன் இணைந்ததாக தாமரை கோபுர வளாகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள உணவகங்கள், வர்த்தக நிலையங்கள், களியாட்ட விளையாட்டு வசதிகள் குறித்து உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பமளிக்கப்பட வேண்டுமென்றும் பாரம்பரிய ஆக்கத்திறன்களுக்கும் இடமளிக்கப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் நாட்டின் சாதாரண மக்களுக்கும் தாமரை கோபுரத்தை பார்த்து மகிழ்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.