1915 ஆக அதிகரித்தது கொரோனாத் தொற்று – நேற்று 10 பேர் அடையாளம்

Corona Keyvisual 1920x1080px WEB
Corona Keyvisual 1920x1080px WEB

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 29 பேர் குணமடைந்துள்ளனர்.

நேற்றிரவு தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,915 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,371 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று ஈரானிலிருந்து வந்த 04 பேர், கந்தக்காட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 05 கடற்படையினர் உட்பட 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவரை தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் கடற்படை மற்றும் அவர்களுடன் நெருக்கமான 935 பேர் அடங்குகின்றனர். இதில் 898 பேர் கடற்படையினராவர்.

இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களில் இதுவரை 663 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், இலங்கையில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 533 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றனர். அத்துடன் 11 பேர் சிகிச்சைகளின்போது உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 55 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.