கொள்கை கொள்கை என கூறியவர்கள், ஏன் ஒரே சின்னத்தில் கொள்கையுடன் போட்டியிடவில்லை – எஸ்.வினோ நோகராதலிங்கம்

DSC 0158

தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்குள் பல்வேறு பிரச்சினைகள் வந்த போதும் அர்ப்பணிப்பான ஒற்றுமையான விட்டுக் கொடுப்புக்கள் மூலம் இன்று கூட்டமைப்பு தனது பாதையில் சென்று கொண்டிருக்கின்றது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் முக்கியஸ்தர் வசந்தன் ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பு மன்னாரில் தனியார் விடுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மாலை  இடம் பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

DSC 0182
DSC 0144

இதன் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தொடர்ந்து உரையாற்றுகையில்,,,
தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருந்து பலர் வெளியேறிச் சென்றுள்ள போதும், கூட்டமைப்பு யாரால் உருவாக்கப்பட்டதோ அவர்கள் இன்று அரசியல் ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் இல்லாது விட்டாலும் அவர்களினால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு செத்து விடக்கூடாது தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு மரணம் ஏற்படக்கூடாது என்பதற்காக இன்று வரை எங்களுக்குள் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்ற போதும் நாங்கள் ஓரணியில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

தமிழரசுக்கட்சியை சேர்ந்த சுமந்திரன் அவர்களின் கருத்து ஒவ்வொரு தமிழ் மகனினுடைய நெஞ்சையும் வேக வைத்துக்கொண்டிருக்கும் கருத்தாக உள்ளது.
ஆனால் நாங்கள் அவற்றை பொறுமையாகவும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  ஒற்றுமை சீர் குலைக்கப்படக் கூடாது என்பதற்காக நாங்கள் பொறுமையாக குறித்த விடயத்தை கையாண்டு வருகின்றோம்.

எதிர் காலங்களில் இது போன்ற நடவடிக்கைகள் நீங்கள் எங்களுக்கு தருகின்ற ஆணையின் ஊடாக நிச்சயமாக நாங்கள் பலமாக தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்குள் இருக்கின்ற போது பாராளுமன்றத்தில் இருக்கின்ற போது நிச்சயமாக இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களின் உணர்வுகளோடு ஒத்துப்போகின்ற, தமிழ் மக்களின் உணர்வுகளை கொச்சைப் படுத்தாத ஒரு நிலையோடு தான் நாங்கள் இறுதி வரை பயணிப்போம்.

இத்தேர்தலிலே நீங்கள் எங்களை ஆதரிக்க வேண்டும். விருப்பமானவர்கள் வீட்டிற்கு வாக்களிக்க வேண்டும். வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுக்கின்ற உங்களுக்கு விருப்பமானவர்களை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும். தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் நாங்கள் தவறி விட்டோம் என்று கூறுவதிலே எந்த வித அர்த்தமும் இல்லை. ஒன்று நீங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஆதரியுங்கள்.

இருக்கின்ற கட்சிகளில் ஒற்றுமை படுத்தப்பட்ட கட்சி என்றால் தமிழ் தேசியக்கூட்டமைப்பே. கொள்கை கொள்கை என கூறியவர்கள் இன்று வேறு வேறு சின்னங்களில் போட்டியிடுகின்றனர். ஏன் அவர்கள் ஒரே சின்னத்தில் கொள்கையுடன் போட்டியிடவில்லை.  நீங்கள் அனைவரும் மிக நிதானமாக செயல்பட வேண்டும். புதிதாக வந்த கூட்டணிகள் கொள்கைகள் என்று சொல்வது எல்லாம் அப்பட்டமான பொய் என அவர் மேலும் தெரிவித்தார்.