கருணா சொன்னதை வேறு யாரும் சொல்லியிருந்தால் நிலமை எப்படி இருக்கும்? ருவன் விஜேவர்தன

ruvan
ruvan

கருணா அம்மான் கூறிய பாரதூரமான கருத்துக்கள் தொடர்பில் எதுவும் கூறாமலிருக்கும் ராஜபக்சக்களின் மௌனம் அவர்களது சந்தர்ப்பவாத மற்றும் ஏமாற்று அரசியலைத் தெரியப்படுத்துகிறது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.  

கம்பஹாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கடந்த காலங்களில் தேசப்பற்றினைப் பற்றி பேசிய குழுக்கள் கருணா அம்மானுடைய கருத்துக்கள் தொடர்பில் மௌனிப்பதானது சந்தர்ப்பவாத அரசியலை சமூகத்திற்கு காண்பிக்கிறது.

கருணா அம்மான் கூறியதைப் போன்றதொரு கருத்தினை ஐக்கிய தேசிய கட்சியில் ஒருவரோ அல்லது கட்சியுடன் தொடர்புபட்ட எவரேனுமொருவரோ கூறியிருந்தால் தற்போது நாட்டில் எவ்வாறான சூழல் ஏற்பட்டிருக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

மதகுருமார்கள் , ஊடகங்கள் மற்றும் வெ்வேவே குழுக்களை இணைத்துக் கொண்டு ராஜபக்சக்கள் எவ்வாறு செயற்பட்டிருப்பார்கள் என்பதை கற்பனை செய்து பார்க்க வேண்டும்.

கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டதை விடவும் மிகப் பாரதூரமான விடயமொன்றை கருணா அம்மான் கூறியுள்ள போதிலும் ராஜபக்சக்கள் மௌனிப்பது அவர்களது சந்தர்ப்பவாத மற்றும் ஏமாற்று அரசியலை வெளிப்படுத்துகிறது. எது எவ்வாறிருப்பினும் இராணுவ வீரர்களைக் கொன்று குவித்ததாகக் கூறும் கருணா அம்மானுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.