கருணாவின் வாக்குமூலம் சர்வதேச ரீதியாக எமக்கு சாதகம்!: தினேஸ்

karuna thines
karuna thines

அமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தம் குறித்த இறுதிமுடிவினை புதிய நாடாளுமன்றம் கூடிய பின் அரசாங்கம் அறிவிக்கும் என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாடுகளுடன் செய்து கொண்டுள்ள அனைத்து ஒப்பந்தங்களையும் அரசாங்கம் மீளாய்வுக்கு உட்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று பௌத்த மக்களின் பெருந்தலைமைத்துங்களான அஸ்கிரிய மற்றும் மல்வத்துப் பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்திப்பதற்காக கண்டிக்கு விஜயம் செய்துள்ளார்.

அரசாங்கத்தின் தேர்தல் பணிகள், வெளிவிவகார அமைச்சின் செயற்பாடுகள் மற்றும் அரசாங்கத்தின் பல விடயங்களையும் மகாநாயக்க தேரர்களிடம் பகிர்ந்து கொண்ட அவர் அவர்களிடம் ஆசியையும் பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

அமெரிக்கா மீது எந்த அச்சமும் கிடையாது. இராஜதந்திரிகள் நடந்து கொள்ள வேண்டிய விடயம் குறித்த ஆலோசனைப் பேரில் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய குறித்த சம்பவம் இடம்பெற்று ஓரிரு மணித்தியாலங்களிற்குள் தவறு சரிசெய்யப்பட்டது.

இதேவேளை, இலங்கைக்கும், சர்வதேச நாடுகளுக்கும் இடையிலான மத்தியஸ்த கொள்கை மற்றும் நிலைப்பாட்டினை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்பதை அரச தலைவர் தனது பதவியேற்பு விழாவில் கூறியிருந்தார்.

இதன்படி சர்வதேச நாடுகளுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள சர்வதேச ஒப்பந்தங்கள் அனைத்தும் எமது நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்று மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றது.

அதில் ஒன்றுதான் எம்.சி.சி ஒப்பந்தம். அதேபோல ஜெனீவா தீர்மானமும் உள்ளடங்குகிறது. ஜெனீவா தீர்மானம் குறித்து எமது முடிவினை அங்கு சென்று அறிவித்துவிட்டோம். எம்.சி.சி ஒப்பந்தம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

அதனை குழு மூலமாக மீளாய்வு செய்து வருகிறோம். ஒருசிலர் தெரிவித்துவரும் கருத்துக்கள் உண்மையாகி விடாது. எனவே புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டதன் பின்னர் இந்த ஒப்பந்தங்கள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை அறிவிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரச படையினர் ஆயிரக்கணக்கானவர்களை ஒரே இரவில் கொலை செய்ததாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாகவும் வெளிவிவகார அமைச்சர் இதன்போது கருத்து வெளியிட்டுள்ளார்.

கருணா அம்மானுக்கு எதிரான விசாரணை நடத்தப்படுவதாகக் கூறிய அவர், கருணா அம்மான் வெளியிட்ட தகவல்களுக்கு அமைய விடுதலைப் புலிகள் எவ்வளவு கொடூரக் கொலைகளை செய்துள்ளார்கள் என்பதை சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஜனநாயகவாத முறைக்குள் அனைவரையும் சேர்ப்பதே எமது நோக்கமாக உள்ளது. அதேபோல தவறு செய்திருந்தால் அதுகுறித்து விசாரணை செய்வதுவும் அரசாங்கத்தின் கடமை. மன்னிப்பு அறிவித்தல் விடுப்பதற்கும் அரசாங்கத்தினால் முடியும்.

கருணா அம்மான் கூறிய சம்பவம் இடம்பெற்றபோது நான் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி உறுப்பினராக கேள்வி எழுப்பிய ஒருவனாக இருந்தேன். ஆகவே இதுகுறித்து நாங்கள் தொடர்ந்தும் செயற்பட்டோம்.

இப்படிப்பட்ட சம்பவங்கள் இடம்பெறாத வகையில் ஆயுதப் போராட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவந்தது. அரச படையினரால் சுமார் 3 இலட்சம் பேர் மீட்கப்பட்டனர்.

முன்னாள் போராளிகள் பலரும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சுயதொழில் ஆரம்பித்துக் கொடுப்பதற்கான வழிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

எனவே கருணா அம்மான் விடயம் குறித்து விசாரணை நடத்தப்படும். அதேபோல அவரது அரசியல் பின்னணி மற்றும் தனிப்பட்ட விடயங்கள் குறித்து நாங்கள் கருத்துக்கூற முடியாது. விசாரணை நடத்தப்பட்டு உண்மை வெளிகொணர்வது அவசியமாகும்.

அதேபோல கருணா அம்மான் கூறிய விடயங்களானது ஜெனீவா மனித உரிமைப் பேரவைக்கு பொருந்தக் கூடிதாகும்.

இலங்கை அரசாங்கம் மீதும், படையினர் மீதும் விரல் நீட்டும் மேற்குலக நாடுகளும் ஐ.நா மனித உரிமைப் பேரவையும், கருணா அம்மான் கூறியதுபோல விடுதலைப் புலிகளினாலும் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளையும் கருத்திற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.