ஆபத்தானதாக மாறுகிறதாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – விமலின் கண்டுபிடிப்பு

625.500.560.350.160.300.053.800.900.160.90 2 3

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் தற்போது ஆபத்தான கட்சியாக மாறி வருகின்றது. முன்னாள் புலி உறுப்பினர்களைக் கொண்ட கட்சியான ஜனநாயகப் போராளிகள் கட்சி கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளமை தொடர்பில் நாம் மிகவும் அவதானத்துடன் விழிப்புடனும் இருக்க வேண்டும்.” என்று மஹிந்த அணியின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட ஒரேயொரு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. தமிழ் மக்கள் தாயகத்தில் சுதந்திரமாக வாழ வேண்டுமானால் கூட்டமைப்பை நடைபெறவுள்ள தேர்தலில் பலப்படுத்த வேண்டும் என்று ஜனநாயகப் போராளிகள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்பட்ட கட்சி. ஒவ்வொரு தேர்தலிலும் புலிகளின் பெயரைப் பயன்படுத்தியே இந்தக் கட்சி வடக்கு, கிழக்கில் வாக்குகளைப் பெற்று வருகின்றமை உண்மை. புலிகளின் கொள்கைகளைப் பின்பற்றும் இந்தக் கட்சி வடக்கு, கிழக்கில் தற்போது ஆபத்தான கட்சியாக மாறி வருகின்றது.

இந்தநிலையில், முன்னாள் புலி உறுப்பினர்களைக் கொண்ட கட்சியான ஜனநாயகப் போராளிகள் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளமை தொடர்பில் நாம் மிகவும் அவதானத்துடன் விழிப்புடனும் இருக்க வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் புலிகளைப் பகிரங்கமாக புகழ்ந்து பாடியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்குகளைச் சுருட்டி வருகின்றது.

தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்பை முன்னிறுத்தி அதன் முன்னாள் உறுப்பினர்களைச் சேர்த்துப் பயணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் நாட்டுக்கு மிகவும் ஆபத்தானவை. இது தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும்” – என்றார்.