கருணா குறித்து போர்க்குற்ற விசாரணை அவசியம்! மனித உரிமை கண்காணிப்பகம்

karuna
karuna

கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறித்து யுத்த குற்ற விசாரணை அவசியம் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மிக நீண்ட காலத்திற்கு முன்னரே அவரை யுத்த குற்ற விசாரணைகளிற்கு உட்படுத்தியிருக்கவேண்டும் என அந்த கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது படையினரை பெருமளவில் கொலை செய்தேன் என அவர் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, இலங்கை அதிகாரிகள் இது குறித்து விசாரணைகளிற்கு உத்தரவிட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் உண்மையில் கருணா அம்மான் யுத்த குற்றங்களிற்காக பல வருடங்களிற்கு முன்னரே விசாரணைக்கு உட்படுத்தியிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கருணா அம்மானின் தலைமையின் கீழ் செயற்பட்ட படையணியினர் 1990ஆம் ஆண்டு ஜூனில் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த நூற்றுக்கணக்கான பொலிஸாரை கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த வருடம் ஓகஸ்ட் மாதம் அவரது படையணியினர் 200 பொதுமக்களை கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருணாவை யுத்த குற்றங்கள் மற்றும் ஏனைய பாரிய மனித உரிமை துஸ்பிரயோகங்களிற்காக விசாரணை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள மீனாக்சி கங்குலி, ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ மீதே யுத்த குற்றச்சாட்டுகள் உள்ளதன் காரணமாக கருணா மீண்டும் நீதியின் பிடியிலிருந்து தப்புவார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.