உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஹரின் பெர்னாண்டோ கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தல்!

vijaya
vijaya

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவைக் கைது செய்ய வேண்டும் என்று அரசிடம் முன்னாள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

மேற்படி தாக்குதல் தொடர்பில் அறிந்திருந்தும் அதனை வெளிப்படுத்தாத அவரை மனிதப் படுகொலை குற்றச்சாட்டின் பேரில் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் அனைத்து இன, மத மக்களினதும் பௌத்த தேரர்களினதும் கூட கௌரவத்துக்கும் அபிமானத்துக்கும் உரியவராக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை திகழ்கின்றார். அவரைக் கேலி செய்யும் விதத்தில் ஹரின் பெர்னாண்டோ நடந்து கொண்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் தமது தந்தையார் தெரிவித்திருந்தும் அதனை வெளிப்படுத்தாது தாம் அன்று ஆலயத்துக்குச் செல்லவில்லை என ஹரின் பெர்னாண்டோ கூறியதும், தம்மைப் பாதுகாத்துக் கொண்டு கத்தோலிக்க மக்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற தோரணையில் அவர் கூற்றுக்களை தெரிவித்திருந்ததையும் எவ்வாறு ஏற்க முடியும்?

மேற்படி தாக்குதலில் தாய் யார்? தந்தை யார்? மகன் யார்? உறவினர் யார்? என்று கூட இனம் கண்டுகொள்ள முடியாத நிலையில் ஒரே குவியலாக அனைத்து மனித சதைகளும் காணப்பட்டதை சகலரும் அறிவர். அந்தநிலையில் அவர் மனிதப் படுகொலை குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட வேண்டும்” – என்றார்.