உரிமைக்காகப் போராடும் சூழல் உருவாகிறதாம்!- சிவமோகன் பேச்சு

sivamokan
sivamokan

ஈழத் தமிழர்கள் தமது உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஒரு தகுந்த சூழல் உருவாகிக் கொண்டிருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வன்னியில் மக்களின் வாக்குகளைச் சிதைவடையச் செய்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியைத் தடுப்பதே சுயேட்சைக் குழுக்கள் மற்றும் புதிய கட்சிகளின் நோக்கமாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், நாடு தற்போது நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கியுள்ளது.

இந்நிலையில், இந்தத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிச்சயமாக அமோக வெற்றிபெற்று ஈழத் தமிழர் விடுதலை நோக்கிய உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்கும்.

காலத்திற்குக் காலம் தேர்தல் வருகின்றபோதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருக்குலைத்து அதன் வெற்றியை இல்லாமல் செய்ய வேண்டும் என்று சொல்லி மத்திய அரசு கங்கணம் கட்டுவது வழமையே.

ஆனால், தேர்தல் முடிவடையும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியடையும் என்பதுடன் ஈழத் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி வருகின்றது என்பதனை யாரும் மறுக்க முடியாது.

இன்று தமிழர்களின் பாதுகாப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கையில் மட்டுமே உள்ளது. சூழல் காலத்திற்குக் காலம் மாறிவருகின்றமை உண்மை. ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை விடுதலைப் புலிகள் முன்னெடுத்தபோது அதன் மீது தாக்கம் செலுத்தியது, அமெரிக்காவில் இடம்பெற்ற பாரிய விமானத் தாக்குதலே.

தற்போதைய சூழலில்கூட ஐ.நா.சபையின் பார்வைக்கு முன்பு இலங்கை அரசாங்கம் தற்போது செயற்படுத்துகின்ற பல நடவடிக்கைகள் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றன.

அந்த அடிப்படையில் ஈழத்தமிழர்கள் தமது உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச்செல்ல ஒரு தகுந்த சூழல் உருவாகிக் கொண்டிருக்கின்றது. போர்க் குற்றம் புரிந்தவர்கள் பலர் இந்த ஆட்சியில் பதவிகளில் உள்ளனர். இது இந்த நாட்டிற்கு ஒரு நல்ல சகுணம் இல்லை.

பெருந்தொகையான இராணுவ அதிகாரிகள் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். போர்க் குற்றம் செய்தவர்கள் அரச தலைவரின் வலக்கை, இடக்கையாக உள்ளனர். இந்நிலையில், சர்வதேச தலையீடு ஈழத் தமிழர்கள் விடயத்தில் தேவைப்படுகின்றது” என்று தெரிவித்துள்ளார்.