இலங்கையில் சிக்கியிருந்த இந்தியர்கள் சென்னைக்கு பயணம்

520536
520536

இலங்கையில் சிக்கியிருந்த 117 இந்திய பிரஜைகள் விசேட ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று கொழும்பில் இருந்து சென்னைக்கு பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

இலங்கையில் சிக்கியிருந்த 117 இந்திய பிரஜைகள் விசேட ஏர் இந்தியா விமானம் (AI 0274) மூலமாக 2020 ஜூலை 03 ஆம் திகதி கொழும்பிலிருந்து சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். கொவிட்19 காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் உலகளவில் சிக்கியிருக்கும் இந்திய பிரஜைகளை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான, இந்திய அரசின் “வந்தே பாரத் மிஷன்” திட்டத்தினுடைய மூன்றாவது கட்டத்தின் ஓர் அங்கமாக இந்த விமானப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின்கீழ் இலங்கையில் இருந்து இயக்கப்படவிருக்கும் அடுத்த விமானசேவைகள்;
AI 0282 – கொழும்பு – டில்லி 08 ஜூலை 2020
AI 0282 – கொழும்பு – டில்லி 18 ஜூலை 2020

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் இந்த விமானத்திற்கான பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவசரமாக நாடு திரும்ப வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு, குறிப்பாக நிர்க்கதியாகியுள்ள குடிபெயர் தொழிலாளர்கள், விசா காலாவதியான நிலையில் தங்கியிருப்பவர்கள், மருத்துவ உதவிகள் தேவைப்படுவோர், கர்ப்பிணிகள், பெண்கள், முதியவர்கள், குடும்ப உறுப்பினரின் மரணத்தை தொடர்ந்து உடனடியாக இந்தியா திரும்புவதற்கு கோரிக்கைகளை முன் வைத்திருப்போர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு வெளிநாடுகளில் சிக்குண்டிருப்பவர்களுக்காக இந்திய உள்துறை அமைச்சினால் வெளியிடப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட செயற்பாட்டு முறைமையின் பிரகாரம், முன்னுரிமை வழங்கப்படும்.

கொவிட் 19 காரணமாக சர்வதேச பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் சிக்கியிருந்த இந்திய பிரஜைகள், சொந்தநாடு நோக்கிய தமது பயணம் குறித்து மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியிருந்தனர். கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு ஜூன் 01ஆம் திகதி இந்திய கடற்படை கப்பல் ஐ என் எஸ் ஜலஷ்வா கப்பற் சேவை, 2020 மே 29 , ஜூன் 15 மற்றும் ஜூன் 22 ஆகிய மூன்று திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட ஏர் இந்திய விமானசேவைகள், ஏனைய பல விசேட விமான சேவைகள் மற்றும் இன்றைய விமான சேவை உட்பட்ட சேவைகள் மூலமாக 1600க்கும் அதிகமான இந்திய பிரஜைகள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள் இதுவரையில் தம்மை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்ய தவறியிருப்பின் கீழ்வரும் இணையத்தளத்தில் பதிவு செய்யுமாறு கோரப்படுகிறார்கள் https://hcicolombo.gov.in/COVID_helpline சகல இந்திய பிரஜைகளையும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் அறிவித்தல்களை அறிந்து கொள்ளுமாறும் நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)