யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 6 பேர் தகுதி

1510050435 3250582 hirunews Jaffna Univercity

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு கிடைத்த 7விண்ணப்பங்களில் 6 விண்ணப்பங்கள் மதிப்பீட்டுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் தகவல் நேற்று இடம்பெற்ற பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டத்தின் போது பேரவை உறுப்பினர்களுக்குப் பகிரப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 15 ஆம் திகதி, பல்கலைக்கழகப் பதிவாளரால் பகிரங்கமாகக் கோரப்பட்ட விளம்பரத்துக்கமைவாக 7 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ந. தனேந்திரனுடையது. உரிய முறைப்படி நிரப்பப்படாத காரணத்தினால் அது நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் துணைவேந்தரும்,  கணிதப் புள்ளிவிபரவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் இ.விக்னேஸ்வரன், உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன், வணிக முகாமைத்துவ பீடாதிபதி ரி.வேல்நம்பி, மருத்துவ பீடாதிபதி வைத்திய நிபுணர் எஸ். ரவிராஜ், விஞ்ஞான பீடம், தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும், கணிதப் புள்ளிவிபரவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா, புள்ளி விபரவியல் துறைப் பேராசிரியர் செ. இளங்குமரன் ஆகியோரின் விண்ணப்பங்கள் மதிப்பீட்டுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டு, பேராசிரியர் அபே குணவர்த்தன தலைமையிலான மதிப்பீட்டுக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுவின் மதிப்பீட்டின் படி புள்ளிகளின் அடிப்படையிலான திறமைப்பட்டியலின் முதல் 5 பேரின் விபரங்கள்அறிக்கை கிடைக்கப்பெற்றதும், எதிர்வரும் ஆகஸ்ட் 7 ஆம் திகதியளவில் விசேட பேரவைக் கூட்டமொன்றில் சமர்ப்பிக்கப்பட்டு அன்றைய தினமே பேரவை உறுப்பினர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு மூன்று பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர். தெரிவு செய்யப்படும் மூன்று பேரின் விவரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, உயர் கல்வி அமைச்சு ஆகியவற்றின் ஊடாக ஜனாதிபதியின் இறுதித் தெரிவுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளன.