ஆட்சி ஏற்றதும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது விசாரணை

unnamed 1 3

“அரச சார்பற்ற அமைப்புக்கள்  தொடர்பில் அமையவுள்ள எமது அரசில் விசேட விசாரணை நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்படும்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை  பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சிறிகொத்தா கட்சிக் காரியாலயத்தைக் காப்பாற்றும் பொறுப்பை ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கொடுத்து விட்டு பலமான அரசு தோற்றம் பெறுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் அனைத்துத் தரப்பினரும் கைகோர்க்க வேண்டும்.  

கடந்த அரசில் அரசியல் பழிவாங்களுக்காகவே எப்.சி.ஐ.டி. அமைக்கப்பட்டது.  அரசியல் பழிவாங்களுக்கான  திட்டமிடல்களை  மக்கள் விடுதலை முன்னணியினர் மற்றும்  ஐக்கிய தேசியக் கட்சியினர் முன்னின்று  முன்னெடுத்தார்கள். இதன் பலனை தற்போது அனுபவிக்கின்றார்கள்.

பெரும்பாலான அரசசார்பற்ற அமைப்புக்கள் கடந்த காலங்களில்  சர்வதேச நாடுகளில் நிதி பெற்று அரசுக்கு எதிரான தவறான பிரசாரங்களை மேற்கொண்டமை குறித்து விசேட  விசாரணைகள்  முன்னெடுக்கப்படும்.

சர்வதேச நாடுகளில் இருந்து எக்காரணிகளுக்காக பெரும்பாலான நிதி கிடைக்கப் பெறுகின்றன என்பது குறித்தும் விசேட  கவனம் செலுத்தப்படும்” – என்றார்.