ஒரு மக்களினத்தை ஆட்சி புரிய அவர்களின் சம்மதம் பெறப்பட வேண்டும்; இலங்கையிலும் அது கடைப்பிடிக்க வேண்டும்: சம்பந்தன்

sambandhan 1561952052 1

தமிழ் பேசும் மக்களுடைய பிரச்சினை விசேடமாக தமிழ் மக்களுடைய பிரச்சினை நாடு சுதந்திரமடைந்த காலம்முதற்கொண்டு நீடித்து வருகின்றது.

1956ம் ஆண்டு தொடக்கம் சகல தமிழ் அரசியல் கட்சிகளும் இந்த நாட்டில் ஆட்சி முறையில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பதற்காக ஜனநாயக ரீதியாக கோரிக்கைகளை வைத்து தமிழ் மக்கள் தங்களுடைய ஏகோபித்த ஆதரவை அந்த கட்சிகளிற்கும் கொள்கைகளிற்கும் வழங்கி வந்துள்ளார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் அடிப்படையில், ஒரு மக்களை ஆட்சி புரிவதற்கு ஜனநாயக ரீதியாக அந்த மக்களுடைய சம்மதமும் இணக்கமும் பெறப்பட வேண்டும். அதனடிப்படையில் 1956ம் ஆண்டு தொடக்கம் தமிழ் மக்களால் வழங்கப்பட்ட ஜனநாயக ரீதியான தீர்ப்புகள் மதிக்கப்படவேண்டும்.  அது என்னவென்றால், ஆட்சி முறையில் மாற்றம் ஏற்பட்டு அதியுச்ச அளவில் அதிகாரங்கள் பகிந்தளிக்கப்பட்டு மக்கள் தங்களுடைய கருமங்களை கையாளக்கூடிய அரசியல் சாசன ரீதியாக உலகத்தில் பல நாடுகளில் நிலவுகின்து போல ஒரு ஆட்சி முறை ஏற்பட வேண்டும் என்பதே. இதனை எவராலும் உதாசீனம் செய்ய முடியாது.

இலங்கை அரசாங்கத்தின் சம்மதத்துடன் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட

1.  அரசியல் குடியியல் உரிமைகளின் அடிப்படையிலும்,

2. பொருளாதார சமூக கலாச்சார உரிமைகளின் அடிப்படையிலும்

ஒரு மக்கள் குழாமிற்கு உள்ளக சுயநிர்ணய உரித்து உள்ளது. இவையெல்லாவற்றையும் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. இவற்றை நிறைவேற்ற வேண்டியது இலங்கை நாட்டினதும் அரசாங்கத்தினதும்  கடமையாகும். இவை மறுக்கப்படுகின்ற போது விளைவுகள் பாதகமாக அமையலாம்.

ஒரு நீண்டகால கலாச்சராத்தையும் பாரம்பரியத்தினையும் பின்பற்றி வருகின்ற தமிழ் மக்களுடைய உரிமைகள் எவராலும் இலகுவாக நிராகரிக்கப்பட முடியாத ஒன்றாகும். இதனை மிகவும் உறுதியாக வலியுறுத்த விரும்புகின்றோம்.

இரா சம்பந்தன்

தலைவர் – தமிழ் தேசிய கூட்டமைப்பு