நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

4fcda4a3069eb46b1f859f0b44dfeac6 XL
4fcda4a3069eb46b1f859f0b44dfeac6 XL

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக மாலையில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என  எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் வடமேல் மற்றும் மேல் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களிலும் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காற்று :

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றானது மேற்குதிசையிலிருந்து வீசக்கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்குதிசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் நீர்கொழும்பிலிருந்து புத்தளம் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:

காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் நீர்கொழும்பிலிருந்து புத்தளம் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக்காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.