கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் புதிய கவச உடை அறிமுகம்

unnamed 25

கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், தாதியர்கள் பிரத்யேகமாக பி.பி.இ கிட் எனும் கவச உடையை அணிந்து சிகிச்சையளிக்கிறார்கள். இதனால் மருத்துவர்களுக்கு பல அசௌகரியங்கள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க தற்போது புதிய கவச உடை தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், அவர்களுக்கு உதவி செய்யும் தாதியர்கள் என பலரும் பி. பி. இ கிட் எனப்படும் முழு பாதுகாப்பு கவச உடைகளை பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது இந்த உடைகள் நான் ஓவன் துணிகளால் தயாரிக்கப்பட்டுள்ளதால், அதிகபட்சமாக 6 மணி முதல் 7 மணித்தியாலம் வரை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த உடைகளில் வியர்வையை உறிஞ்சும் தன்மை இல்லாததால் மருத்துவர்கள், தாதியர்கள், முன்கள பணியாளர்கள் என பலரும் பல்வகையான சிரமங்களையும், அசௌகரியங்களையும் எதிர்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மருத்துவர்களையும், தாதியர்களையும், முன்கள பணியாளர்களையும் பாதுகாக்கும் வகையில் முதன்முறையாக, மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில், பருத்தி நூலாலான பி.பி.இ கிட் எனப்படும் முழு பாதுகாப்பு கவச உடைகள் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இத்தகைய உடைகள், உலகத்தரம் வாய்ந்த இயற்கை தாவர மூலக்கூறு மூலக் கூறுகளைக் கொண்ட மனித உடலுக்கு கவசமாக செயல்படும் செமி ஒர்கானிக் ஆன்ட்டி மைக்ரோபையால் மூலமாக செறிவூட்டப்பட்டிருக்கிறது. இந்த உடைகளில் உள்ள கிருமி நாசினியானது, வைரஸ், பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகளை ஒரே நிமிடத்தில் அழிக்கும் தன்மை கொண்டது. இந்த உடைகளை அணிவதற்கு முன்பாக பின்னலாடைகளாலான கவச உடை ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. இது நூறு சதவீதம் பருத்தி நூல் தயாரிக்கப்பட்டுள்ளதால், மருத்துவர்கள் அணிவதற்கு ஏற்பவும், வியர்வை உறிஞ்சும் தன்மை கொண்டதாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இத்தகைய உடைகள் எளிதில் மக்கும் தன்மை கொண்டதால் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்காது.

இதனால் மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை ஊழியர்கள் இத்தகைய பாதுகாப்பானமுழு பாதுகாப்பு கவச உடைகளுக்கு வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள்.