கொலையாளிகளின் கையில் ஆட்சி அதிகாரம் வேண்டாம்;கணேஸ்வரன் வேலாயுதம்

unnamed 3 1

“தமிழ் மக்களைத் துன்புறுத்திக் கொன்றழித்தவர்களின் கையில் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் வழங்கக்கூடாது. எனவே, நல்லிணக்கத்தை விரும்பும் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியை பொதுத்தேர்தலில் மக்கள் மலரச் செய்ய வேண்டும்.” என்று வலியுறுத்தினார் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் கணேஸ்வரன் வேலாயுதம்.

தென்மராட்சியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மனிதப் படுகொலைக் குற்றவாளிகள் இந்த நாட்டை ஆள்வதற்கு இனிமேல் நாம் இடமளிக்கக்கூடாது.

நாட்டில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரும் ஒற்றுமையாக – சமாதானமாக வாழவேண்டுமெனில் இனவாத, மதவாத நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும்.

ஆனால், ஆட்சியிலுள்ள தற்போதைய அரசால் இந்த நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த முடியாது. ஏனெனில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டிவிட்டுத்தான் இந்த அரசு ஆட்சி நடத்துகின்றது.

இதற்கெல்லாம் பொதுத்தேர்தலில் மக்கள் முடிவுகட்ட வேண்டும். தவறானவர்களின் கையில் ஆட்சி அதிகாரத்தை மக்கள் ஒப்படைக்கக்கூடாது.

நாட்டில் இன நல்லிணக்கமும் மத நல்லிணக்கமும் ஏற்பட்டு மூவின மக்களும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவின் பிரதான இலக்கு.

எனவே, அவர் தலைமையிலான ஆட்சியைப் பொதுத்தேர்தலில் மக்கள் மலரச் செய்ய வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் சஜித் பிரேமதாஸவுக்கு அமோக ஆதரவு வழங்கினார்கள். அந்த ஆதரவை அவரின் கட்சிக்குப் பொதுத்தேர்தலிலும் யாழ். மாவட்ட மக்கள் வழங்கவேண்டும்” – என்றார்.