ரயிலில் பயணிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

a1080

கொவிட் -19 வைரஸ் பொது போக்குவரத்து சேவை பயன்பாட்டின் ஊடாகவே இரண்டாம் அலையாக தாக்கம் செலுத்தவதற்கு வாய்ப்புள்ளது. புகையிரதத்தில் பயணிகள் பயணம் செய்யும் போது 1 மீற்றர் தூர இடை வெளியை பேணுவது சாத்தியமற்றதாக உள்ளது. பயணிகளே தங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பிரணாந்து தெரிவித்தார்.

கொவிட் – 19 வைரஸ் கொத்தணி பரவலாக காணப்படும் நிலையில் அதிகளவான தொற்றாளர்கள் சமூகத்தில் இனங்கானப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ள நிலையில், பொதுப்போக்குவரத்து சேவை அதிக அவதான மட்டத்தில் உள்ளது. இவ்விடயம் தொடர்பில் புகையிரத திணைக்களத்தில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சுகாதார தரப்பினர் அறிமுகப்படுத்திய பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக அனைத்து புகையிரத நிலையங்களிலும் பின்பற்றப்படுகின்றது. புகையிரத நிலையத்திற்குள் உட்பிரவேசிக்கும் முன் கைகழுவுதல், உடல் வெப்பநிலையை அவதானித்தல் ஆகியவை இடம் பெறுகின்றன. 1 மீற்றர் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டது மாத்திரம் புகையிரத சேவையில் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த வேளையில் புகையிரத சேவையின் போது 1 மீற்றர் தூர இடைவெளி பின்பற்றப்பட்டது. ஆனால் தற்போது தூர இடை வெளியை பின்பற்றுவது முடியாத காரியம். புகையிரதங்களில் பயணிகள் நெருக்கமாகவே பயணம் செய்கிறார்கள். தற்போதைய நிலையில் இது வைரஸ் பரவலை ஏற்படுத்த ஒரு சாதக காரணியாக அமையும் என்று கருதுகிறோம்.

புகையிரத சேவையில்அதிகளவான புகையிரதங்களை இதுவரையில் ஈடுப்படுத்தியுள்ளோம். இருப்பினும் பயணிகள் போக்குவரத்தில் ஈடுப்படுவது குறைவடையவில்லை. அரசாங்கமே தற்போதைய நெருக்கடி சூழ்நிலையை கருத்திற்கு கொண்டு மாற்றுவழிகளை முன்வைக்க வேண்டும். அரச மற்றும் தனியார் துறையில் சேவையாற்றுபவர்களின் சேவை நேரத்தை மாற்றியமைத்ததாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் இதுவரையில் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

புகையிரத சேவையை பயன்படுத்தும் பொது மக்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு புகையிரத திணைக்களம் தன்னிச்சையான தீர்மானங்களை எடுக்க முடியாது. அரசாங்கத்தினால் குறிப்பிடப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்களை முழுமையாக கடைப்பிடிக்கிறோம். ஆகவே பொது மக்கள் தங்களின் பாதுகாப்பினை முறையாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அநாவசியமான பயணங்களை தவிர்த்துக் கொள்வதுகட்டாயமாகும் என்றார்