வடக்கு மக்களின் மனதை வெற்றியடைந்தே தீருவோம் -நாமல்

images 8
images 8

போரிலிருந்து வடக்கை மீட்டுவிட்டோம் அடுத்ததாக இன ரீதியான அரசியல் பிடிக்குள் இருந்து வடக்கை மீட்டெடுக்க வேண்டும். வடக்கு மக்களின் மனங்களை வெல்வதற்கு எமக்கு இன்னும் காலம் எடுக்கும். அதுவரை பொறுமை காப்போம். ஆனால், நம்பிக்கையைப் பெறுவதற்கான போராட்டத்தைக் கைவிடமாட்டோம்.”-என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அம்பாந்தோட்டை மாவட்ட வேட்பாளர் நாமல் ராஜபக்ச   தெரிவித்தார்.

‘கடந்த பத்து வருடங்களாக நீங்கள் வடக்குக்குச் சென்று வருகின்றீர்கள். இளைஞர்களைச் சந்திக்கிறீர்கள். அப்படி இருந்தும் ஏன் இன்னும் அங்கு வாழும் இளைஞர்களின் ஆதரவை உங்கள் பெற முடியாதுள்ளது?” என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.

 அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தெற்கு இளைஞர்களுக்கு இணையானவர்களே வடக்கு இளைஞர்களும். அவர்களிடம் நான் வித்தியாசத்தைக் காணவில்லை. தேசிய கட்சி ஒன்றுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்பை முதலில் நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலின்போது மாத்திரமே அந்த வாய்ப்பு வழங்கப்படுகின்றது. அதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகவே வாக்குகளைப் பெற முயற்சிக்கப்படுகின்றது மைத்திரிபால சிறிசேனவும் சஜித் பிரேமதாஸவும் அவ்வாறே வாக்குகளைப் பெற்றனர்.

எமக்கு 6 அல்லது 8 வீதம் கிடைத்தாலும் பரவாயில்லை. தனி வழியில் செல்ல வேண்டும் என்ற முடிவில் இருக்கின்றோம். எனவே, தேசிய நீரோட்டத்துக்குள் சங்கமிக்க அவர்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் வாக்குக் கிடைக்கவில்லை என்பதற்காக முயற்சியைக் கைவிடக்கூடாது.

உதாரணமாக ஜே.வி.பி. இளைஞர்களை ஐக்கிய தேசியக் கட்சி கொன்றது. அவ்வாறு செய்த ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பியும் இணைவதற்கு 30 ஆண்டுகள் எடுத்தன. இரு தரப்புகளும்  இணைந்து செயற்படவில்லை எனக் கூறமுடியாது.

கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கு ஆதரவாகவே ஜே.வி.பி. உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வாக்களித்துள்ளனர். இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் நின்றனர். ஆனாலும், இதற்கு 30 ஆண்டுகள் எடுத்தன. எமது அரசியல் பயணத்துக்கு வடக்கு மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக 30 ஆண்டுகள் எடுக்கும் என நாம் கூறவில்லை. அதற்காகத் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.

குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் இன்னும் தனிநாட்டுக்காகக் குரல் எழுப்பும் நிலையிலும், தெற்கிலுள்ள தேசிய கட்சி வடக்கில் அரசியல் செய்யாத நிலையிலும்கூட எமக்கு 10 வீத வாக்குகள் கிடைக்கின்றன. எனவே, வடக்கைக் கைவிட கைவிட வேண்டாம் என தெற்கிலுள்ள கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

இற்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கில் இன ரீதியிலான அரசியல் இருக்கவில்லை. தேசிய அரசியலே அங்கு முன்னெடுக்கப்பட்டது. தேசிய நீரோட்டத்தில் அவர்களைச் சங்கமிக்க வைப்பதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும். எனவே, வடக்கு அரசியலைக் கைவிட வேண்டாம் என கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன் என குறப்பிட்டுள்ளார் .