சொகுசு வீட்டுக்கு பேரம் பேசலாமென்றால், அரசியல் கைதிகளுக்காக ஏன் பேச முடியவில்லை?: சிறிகாந்தா

srikantha
srikantha

இலங்கைத்தீவின் அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்த பின்னரும் எதிர்க்கட்சி தலைவரிற்குரிய சொகுசு பங்களாவிலேயே வாழ்ந்த முதலாவது அரசியல்வாதி இரா.சம்பந்தனே. சொகுசு பங்களா விடயத்தை அரசாங்கத்துடன் பேசி உங்களால் சாதிக்க முடியுமென்றால், தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை ஏன் பேசி சாதிக்க முடியாமல் போனது என சாட்டையடி கேள்வியெழுப்பியுள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் என்.சிறிகாந்தா.

வடமராட்சி, கலிகையில் நேற்று 917) இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிய போது இந்த கேள்வியை எழுப்பினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் ஒரு நல்ல அரசியல் தலைமையை பெறுவதற்கு தகுதியுடையவர்கள். தமிழ் மக்களின் பிரச்சனைகள் அப்படியே இருக்கின்றன. சுதந்திர இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை வலியுறுத்தியதன் விளைவாக தமிழ் மக்கள் இழந்தவை ஏராளம். இருந்தும் இதுவரை அரசியல் நீதி கிடைக்கவில்லை.

எமது மக்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள். கிட்டத்தட்ட 94 அரசியல் கைதிகள் 12 வருடங்களிற்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரை கூட கூட்டமைப்பினால் விடுவிக்க முடியவில்லை.

கூட்டமைப்பின் தலைவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட மாளிகை, பதவி போன பின்னரும் அவரிடம் விட்டு வைக்கப்பட்டது. அதற்கு சொல்லப்பட்ட காரணம், அவருக்கு வயதாகி விட்டது. எம்.பிக்குரிய வீடு மாடியில் ஒதுக்கப்பட்டால், மாடிப்படியேற முடியாது என காரணம் சொல்லப்பட்டு, அரசாங்கத்தின் ஆதரவுடன், எதிர்க்கட்சி தலைவராக வந்த மஹிந்த ராஜபக்சவின் சம்மதத்துடன், அவருக்கு உரித்தில்லாத எதிர்க்கட்சி தலைவர் மாளிகையில் அவர் தொடர்ந்து வாழ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைத்தீவின் அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்த பின்னரும் எதிர்க்கட்சி தலைவரிற்குரிய சொகுசு பங்களாவிலேயே வாழ்ந்த முதலாவது அரசியல்வாதி இரா.சம்பந்தனே. சொகுசு பங்களா விடயத்தை அரசாங்கத்துடன் பேசி உங்களால் சாதிக்க முடியுமென்றால், தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை ஏன் பேசி சாதிக்க முடியாமல் போனது. ஆகக்குறைந்தது அரசியல்கைதிகளின் விடுதலையையாவது கூட்டமைப்பினால் ஏன் சாதிக்க முடியவில்லையென கேட்பதற்கு உங்களிற்கும், எனக்கும் உரிமையுள்ளது. தார்மீக தகுதியுள்ளது.

இப்பொழுது ஒற்றுமையை பற்றி பேசுகிறார்கள். கூட்டமைப்பின் தலைவர்களை பாருங்கள். அவர்கள் ஒற்றுமையாகவா இருக்கிறார்கள். அங்கிருப்பவர்கள் பலர் ஒருவருடன் ஒருவர் கதைக்காமல் உள்ளார்கள். அப்படியுள்ளது அங்கு ஒற்றுமை.

தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது நல்ல விடயமாக இருக்கலாமென சென்ற வருடம் கட்சி மாநாட்டில் சம்பந்தன் பேசினார். கட்சியிலுள்ள ஒரு எம்.பி வாய் திறக்கவி்லலை. நாங்கள் மட்டுமே கண்டித்தோம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது நல்ல விடயமென்றால், அந்த நல்ல விடயத்திற்குள் என்னென்ன இருந்தது என்பது உங்களிற்கும் தெரியும், எனக்கும் தெரியும். அந்த அழிவிற்குள் என்னென்ன விடயங்கள் இருந்தன? எமது மக்கள் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சு இருந்தது. மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டது இருந்தது. குழந்தைகள் கருக்கப்பட்ட நிகழ்வுகள் இருந்தன. எமது மக்கள் அங்கங்களை இழந்த நடைபிணமாக நடமாடிக் கொண்டிருக்கின்ற சம்பவங்கள் உள்ளன. இதையெல்லாம் தெரிந்து கொண்டு, தன்னுடைய சிங்கள எஜமானர்களை திருப்திப்படுத்த சம்பந்தன் இவ்விதம் கருத்து கூறினார் என்றார்.