நல்லூர் ஆலய உற்சவம் தொடர்பான செய்தி!

nallor 7
nallor 7

தற்போது நாட்டில் உள்ள நிலைமையினை கருத்தில் கொண்டு இம்முறை நல்லூர் ஆலய உற்சவத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ள இராணுவத்தளபதி சவேந்திர சில்வா நாட்டில் ஏனைய பாகங்களில் உள்ள ஆலயங்களுக்கு உள்ள விதிமுறைகளை போலவே நல்லூர் ஆலயத்திருவிழாவிற்கும் பின்பற்றப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகை தந்த இராணுவத்தளபதியிடம் நல்லூர் உற்சவ காலத்திற்கு மக்களை அனுமதிப்பதற்கான பொறிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது,

“இந்த மாதம் 25ஆம் திகதி வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் ஆலயத்தின் பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ளது. நல்லூர் ஆலயத்தின் வரலாற்று பிரசித்திபெற்ற திருவிழா தொடர்பில் எங்களுக்கு நன்றாக தெரியும். இலங்கையின் பல்வேறு பாகங்களிலிருந்து மக்கள் வருவார்கள். ஆனால் இந்த முறை கொரோனா தொற்று காரணமாக ஆலயத்தில் பூசை வழிபாடுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது .

யாழ் .மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியுடன் கலந்துரையாடி சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கோயிலுக்கு வரும் அடியவர்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து கோயிலுக்கு செல்லவேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட உள்ளது.

எனினும் நல்லூர் ஆலயத்தை பொறுத்தவரை உலகப் பிரசித்தி பெற்ற ஒரு கோவில் என்பது அனைவரும் அறிந்ததே. அதே போல் எல்லா இடங்களிலிருந்தும் அடியவர்கள் கோயிலுக்கு வருவதனால் சில கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

எனவே அதனை பின்பற்றி குறித்த திருவிழாவை நடத்த மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியிடமும் கூறியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.