ராஜபக்சக்களை நம்பிப் பயனில்லை என்கிறார் சஜித்

unnamed 2 6
unnamed 2 6

நாம் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்கள் விரும்புகின்ற அரசியல் தீர்வை வழங்கியே தீருவோம். ஜனாதிபதித் தேர்தலில் நான் வெற்றியடையாவிட்டாலும் எனக்கு இலட்சக்கணக்கில் வாக்குகளை அள்ளி வழங்கிய தமிழ் மக்களை நான் மறக்கவேமாட்டேன். அவர்களுக்கு எப்போதும் நன்றியுடையவனாகவே நான் இருப்பேன்.”என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

‘எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்கள் விரும்பும் நியாயமான தீர்வை வழங்கியே ஆகவேண்டும். அது அரசின் கடமையாகும்’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சில தினங்களுக்கு முன்னர் திருகோணமலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலளித்திருந்த  ராஜபக்ச அரசின் பேச்சாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல, ‘தமிழ் மக்களோ அல்லது சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ விரும்புகின்ற தீர்வை அரசு வழங்கவேமாட்டாது. அதியுச்ச அதிகாரப் பகிர்வுடனான தீர்வு என்று சம்பந்தன் கேட்பது சமஷ்டி தீர்வே. இந்த சமஷ்டி தீர்வுக்கு ராஜபக்ச அரசில் இடமேயில்லை’ என்று கூறியிருந்தார்.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் வினவியபோது அவர் தெரிவித்ததாவது:-

“நாம் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்கள் விரும்புகின்ற அரசியல் தீர்வை வழங்கியே தீருவோம். தமிழர்கள் தமிழீழத்தைக் கோரவில்லை; நாட்டைப் பிரித்துத் தருமாறு கேட்கவில்லை. பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வையே கேட்கின்றார்கள். எனவே, எமது ஆட்சியில் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவோம். புதிய அரசமைப்பின் ஊடாக அதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் தமிழர்களுக்கான தீர்வை வழங்குவோம்.

அதியுச்ச அதிகாரப் பகிர்வுடனான தீர்வை சமஷ்டி தீர்வு என்றும், அது தனிநாட்டுக்கு வழிவகுக்கும் என்றும் ராஜபக்ச அணியினர் கூறுவது வேடிக்கையானது. அரசமைப்புப் பற்றி விளக்கம் இல்லாமல் அவர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.

ராஜபக்சக்களின் ஆட்சியில்  ஒருபோதும் தமிழர்களுக்குத் தீர்வு கிடைக்காது. அவர்களை நம்பிப் பயனில்லை.

எனவே, நாம் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு அவர்கள் விரும்பும் தீர்வை வழங்கியே தீருவோம். ஜனாதிபதித் தேர்தலில் நான் வெற்றியடையாவிட்டாலும் எனக்கு இலட்சக்கணக்கில் வாக்குகளை அள்ளி வழங்கிய தமிழ் மக்களை நான் மறக்கவேமாட்டேன். அவர்களுக்கு எப்போதும் நன்றியுடையவனாகவே நான் இருப்பேன்”என்றும் குறிப்பிட்டுள்ளார்.