ஸ்மார்ட் லாம்ப் போல் கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

Judge saman
Judge saman

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லாம்ப் போல் (Smart Lamp Pule)  கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி   தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
எனவே மனுதாரரின், மனுவில் உள்ள குறைபாடு, எழுத்தாணை மனுவுக்குத் தேவையான கருவூலங்கள் தொடர்பில் திருப்திப்பாடு ஏற்படுத்தப்படாமை மற்றும் மனுதாரரிடம் உள்ள கீழ்த்தரமான நோக்கம் என்பவற்றால் இந்த எழுத்தாணை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், கட்டளை வழங்கினார்.

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லாம்ப் போல் (Smart Lamp Pule)  கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம், யாழ்ப்பாணத்தில் அமரும் வடக்கு மாகாண மேல் நீதிமன்றில்  நீதிப் பேராணை மனு தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் நாவாந்துறை வடக்கைச் சேர்ந்த செல்லப்பர் பத்மநாதன் என்ற 34 வயதுடையவர் இந்த மனுவை தனது சட்டத்தரணி  ரிஷிகேசனி சத்தியநாதன் ஊடாக  சமர்பித்தார்.

யாழ்ப்பாணம் மாநகர சபை முதலாவது பிரதிவாதியாகவும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இரண்டாவது பிரதிவாதியாகவும் யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர் மூன்றாவது பிரதிவாதியாகவும் Edotco Services Lanka (pvt)LTD  நான்காவது பிரதிவாதியாகவும் இணைக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணம் மாநகர முதல்வரும் Edotco Services Lanka (pvt)LTD நிறுவனமும் 2019.05.15ஆம் திகதி செய்து கொண்ட சட்ட வரம்பை மீறிய உடன்படிக்கையை ரத்துச் செய்யும் உறுதிகேள் நீதிப்பேராணை கட்டளை.

Edotco Services Lanka (pvt)LTD  நிறுவனத்தால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் சட்ட விரோத கோபுரங்களை தொடர்ந்தும் அமைக்கக் கூடாது தடைவிதிக்கும் தலையீட்டு நீதிப் பேராணை கட்டளை.
Edotco Services Lanka (pvt)LTD நிறுவனத்தால் அமைக்கப்படும் கோபுரங்களில் 5ஜி தொழிநுட்பத்தைப் பொருத்த Edotco Services Lanka (pvt)LTD நிறுவனம் அனுமதி வழங்க்கக் கூடாது என்ற தலையீட்டு நீதிப் பேராணைக் கட்டளை.

Edotco Services Lanka (pvt)LTD நிறுவனம் இதுவரை அமைத்த கோபுரங்களை அகற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை, மாநகர முதல்வர் மற்றும் மாநகர ஆணையாளர் ஆகியோருக்கு உத்தரவிடும் ஆணையீட்டு நீதிப்பேராணைக் கட்டளை.
மாநகர முதல்வருக்கும் Edotco Services Lanka (pvt)LTD  நிறுவனத்துக்கும் இடையிலான உடன்படிக்கையை இடைநிறுத்தி வைப்பதற்கான இடைக்காலக் கட்டளை.

Edotco Services Lanka (pvt)LTD  நிறுவனத்தால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் சட்ட விரோத கோபுரங்களை தொடர்ந்தும் அமைப்பதை இடைநிறுத்த இடைக்காலக் கட்டளை.
Edotco Services Lanka (pvt)LTD நிறுவனத்தால் அமைக்கப்படும் கோபுரங்களில் 5ஜி தொழிநுட்பத்தைப் பொருத்த Edotco Services Lanka (pvt)LTD நிறுவனம் அனுமதி வழங்குவதை இடைநிறுத்தும் இடைக்காலக் கட்டளை ஆகிய நிவாரங்களை மனுதாரர் மனுவில் கோரியிருந்தார்.

இந்த நீதிப்பேராணை மனு இன்று (ஜூலை 21) செவ்வாய்க்கிழமை கட்டளைக்காக வந்தது.

மனுதாரர் சார்பில் ரிஷிகேசனி சத்தியநாதன் முன்னிலையானார்.

மனுவில் பிரதிவாதிகளான மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர் மற்றும் மாநகர சபை சார்பில் மூத்த சட்டதரணி  அ.இராஜரட்ணம், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோரின் ஏற்பாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையானார்.

நான்காவது பிரதிவாதியான இடொக்கோ (Edotco Services Lanka (pvt)LTD ) நிறுவனம் சார்பில் லக்ஸ்மன் ஜெயக்குமாரின் ஏற்பாட்டில் சட்டத்தரணி தனுசன் முன்னிலையானார்.
“எழுத்தாணை விண்ணப்பங்கள் தொடர்பில் மனுதாரர் இதய சுத்தியுடனும் சுத்தமான கரங்களுடனும் தமது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். ஒழிவு மறைவு, குறுகிய நோக்கங்கள் எதுவும் குறித்த விண்ணப்பங்களின் அடிப்படையாக அமைய முடியாது. 

தனித்த நல்நோக்கம் அல்லது பொதுவான நல்நோக்கம் ஒன்றின் மீது எழுத்தாணை மனு அமைக்கப்படலாம்.
மாறாக கீழ்த்தரமான நோக்கம், மறைமுகத் தேவை என்பவற்றுக்காக எழுத்தாணை கோரிக்கைகள் முன்வைக்கப்படுவது குறித்த மனுக்களை நிராகரிப்பதற்கு போதுமானதாக அமைந்துவிடும்.

இந்த மனுவைப் பொறுத்தவரையில் மனுதாரர் யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் மாநகர முதல்வருக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கை பின்னணியைக் கொண்டுள்ளது என்பது சற்று சிந்திக்க வேண்டியதாக அமைகின்றது.

எனவே மனுதாரரின், மனுவில் உள்ள குறைபாடு, எழுத்தாணை மனுவுக்குத் தேவையான கருவூலங்கள் தொடர்பில் திருப்திப்பாடு ஏற்படுத்தப்படாமை மற்றும் மனுதாரரிடம் உள்ள கீழ்த்தரமான நோக்கம் என்பவற்றால் இந்த எழுத்தாணை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், கட்டளையில் கோடிட்டுக்காட்டினார்.