ஏமாற்றுக்காரர்களுக்கு ஆகஸ்ட் 5இல் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்!

WhatsApp Image 2020 07 21 at 17.33.46
WhatsApp Image 2020 07 21 at 17.33.46
  • கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் சரவணபவன் வலியுறுத்து

“நீதிமன்றத்தையும், தேர்தல்கள் ஆணைக்குழுவையும் லாபகமாக ஏமாற்றும் டக்ளஸ் தேவானந்தா மக்களை ஏமாற்ற மாட்டார் என்று உறுதி கூற முடியுமா? இவர்களைப் போன்ற ஏமாற்றுக்காரர்களுக்கு மக்கள் ஆகஸ்ட் 5ஆம் திகதி தக்க பாடம் புகட்ட வேண்டும்.”

  • இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளருமான ஈ.சரவணபவன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர் டக்ளஸ் தேவானந்தா. ‘உதயன்’ பத்திரிகை வெளியிட்ட செய்திக்காக ஆயிரம் மில்லியன் ரூபா நட்டஈடு கேட்டு வழக்குத் தாக்கல் செய்தார் டக்ளஸ் தேவானந்தா. இந்த வழக்கு 2013 செப்டெம்பர் 16ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

அன்று முறைப்பாட்டாளரான டக்ளஸ் கட்டாயமாக நீதிமன்றுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், நோய்வாய்ப்பட்டு பாதிக்கப்பட்டிருப்பதால், வெளியே நடமாட முடியாமல் இருப்பதால் நீதிமன்றத்துக்கு வர முடியவில்லை என்று அவரது சட்டத்தரணி நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராசா முன்னிலையில் அப்பட்டமான பொய்யைக் கூறினார். படுக்கையில் சுகமில்லாமல் இருந்த டக்ளஸ் அன்று யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியில் யாழ் பல்கலைக்கழக கல்லூரிக்கான அடிக்கல்லை நட்டார்.

அடிக்கல் நடும் விழாவில் அப்போதைய அமைச்சர் டலஸ் அழகப்பெரும, ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, அன்று டக்ளஸின் வலதுகரமாக நின்ற சந்திரகுமார் ஆகியோரும் கலந்துகொண்டனர். அதை ‘உதயன்’ புகைப்படத்துடன் வெளிப்படுத்தியிருந்தது.

சில தினங்களுக்கு முன் மன்னாருக்குச் சென்ற டக்ளஸ் லியோன் தேவாலயத்தில் பங்குத் தந்தையின் தலைமையில் தேர்தல் பரப்புரை செய்துள்ளார். அதற்கான ஒளி, ஒலி நாடாக்களுடன் ஊர்வாசி ஒருவர் மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அதைப் பரிசீலனை செய்த மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் தேவாலயத்தில் தேர்தல் பரப்புரை இடம்பெற்றதை உறுதி செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் சம்பவத்தை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பொலிஸார், டக்ளஸ் தேவாலயத்துக்குச் சென்றது உண்மை. ஆனால், அவர் சாமி கும்பிடத்தான் சென்றார் என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்பட்டுள்ளனர். ஆலயங்களில் சுவாமிக்குத்தான் மாலை போடப்படும். இங்கு டக்ளஸ் மாலை போட்டுக் கொண்டு ஒரு நாயகனாக அமர்ந்து பரப்புரை செய்வது ஊடகங்களில் புகைப்படத்துடன் வெளியாகின.

ஏழு வருடங்களின் முன் தனது சட்டத்தரணி மூலம் நீதிமன்றத்தை ஏமாற்றிய டக்ளஸ் ஏழு வருடங்களின் பின் பொலிஸாரைக் கொண்டு தேர்தல் ஆணைக்குழுவை ஏமாற்றியுள்ளார். இந்த டக்ளஸ் தில்லுமுல்லு செய்வதிலும் ஏமாற்றுவதிலும் கைதேர்ந்தவர்.

நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணைக்குழுவையும் ஏமாற்றிய அமைச்சர் டக்ளஸ் நாளை நம்பிய மக்களை ஏமாற்றமாட்டார் என்று கூற முடியுமா?. இப்படியான ஏமாற்றுக்காரர்களுக்கு மக்கள் சரியான தீர்ப்பை வழங்க வேண்டும்” – என தெரிவித்துள்ளார்.