தேசியத்தோடு கூடிய அபிவிருத்தியே எனது அரசியல் வருகையின் நோக்கம்

DSC 0307
DSC 0307

தேசிய பிரச்சனையை  அரசியல் ரீதியில் தீர்த்து வைப்பார்கள் என்று நம்பியவர்கள் அதை நீத்துப் போகச் செய்துள்ளார்கள்.  யுத்தத்தின் பின்  பாதிக்கப்பட்ட மக்களில் வாழ்வாதாரம் கட்டியெழுப்பப்படவில்லை. இவற்றை தேசியத்தோடு கூடிய அபிவிருத்தியை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலுக்குள் வந்துள்ளேன் என  தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வன்னி தேர்தல் தொகுதியின் மன்னார்  மாவட்ட பெண் வேட்பாளர் திருமதி யூட் மாலினி வெனிற்றன் தெரிவித்தார்.

அவரது அலுவலகத்தில் இன்று(23) வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,
எனது கல்விப் பணி ஓய்வின் பின் வன்னி மக்களின் இடர்பாடுகள் துன்பங்கள் , அவர்களுக்கு பாரிய தேவைகள் இருப்பதை உணர வைத்தது.

யுத்தத்தில் பல மாவீரர்கள் , பொது மக்களின் உயிர்களை பலி கொடுத்தும் இலங்கை அரசால் அல்லது சர்வதேசத்தால் தீர்வுகள் கிடைக்கவில்லை. யுத்த குற்றங்கள் இனச் சுத்திகரிப்பு தொடர்பான தீர்வு எதையும் பெறாத நிலையில்   தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் அவல வாழ்வு வாழ்வதை நான் கண்டேன். 

இவற்றை நாங்கள் நிவர்த்தி செய்ய வேண்டுமானால் அரசியல்  அரங்கில் நாங்கள் பலமாக இருக்க வேண்டும். அந்த தேவை கருதி இந்த தேர்தலை நான் எதிர்கொள்கிறேன். எமது மக்களின் வாழ்க்கையை அவர்களுடைய பொருளாதாரத்தை அவர்களது கல்வியை மிகவும் உன்னதமான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்  என்பது எனது எதிர்பார்ப்பாக இருக்கும்.  
நான் இந்த அரசியலுக்கு வருவதற்கு பல காரணங்களில் மிக முக்கியமான காரணம்  எமது மக்களின் இன விடுதலை. அந்த இன விடுதலையை பெறுவதற்கு சர்வதேசத்திற்கு யுத்த குற்றங்களையும் எம் மீது திணிக்கப்பட்ட பல்வேறுபட்ட கொடுமைகளை இனச் சுத்திகரிப்பையும் நீத்துப் போகச் செய்துள்ளது கடந்த கால அரசியல்.

ஆகவே அதற்கான மாற்று வழியை நோக்கி செல்ல வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது.யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீளக் குடியேறியதன் பின் அவர்களுக்குரிய எந்த வாழ்வாதார உதவித் திட்டங்களும் செய்யப்படவில்லை.
 மாவீரர் குடும்பங்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் ,பரிதாபமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.முன்னாள் போராளிகள் வேலையற்று  என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருக்கிறார்கள.;   பெற்றோரை இழந்த பிள்ளைகள் ஊனமுற்ற பிள்ளைகள் சமூகத்தில் துன்பப்படுகிறார்கள். அவர்களுக்கான எந்த வேலைத்திட்டங்களும் சரியாக முன்னெடுக்கப்படவில்லை.

ஆகவே என்னுடைய அரசியல் நகர்வு என்பது  இவ்வாறு செயற்படுத்தப்படாமல் உள்ளவற்றையும் சீர் செய்ய வேண்டும். கல்விக்கான  விவசாயத்திற்கான முன்னேற்றமான வேலைத்திட்டங்களையும் மாவீரர் குடும்பங்கள் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கான சுய தொழில் மூலம் முன்னேற்றமடையச்  செய்யும் வேலைத்திட்டங்களை செய்வது எனது அரசியல் வருகையின் மிக முக்கியமான ஒன்று என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வன்னி  தேர்தல் தொகுதியின் மன்னார் மாவட்ட பெண் வேட்பாளர் திருமதி யூட் மாலினி வெனிற்றன் தெரிவித்தார்