தாயின் ஈரலை மகளுக்கு மாற்றி இலங்கையில் வைத்தியர்கள் சாதனை

4 implanting the new liver
4 implanting the new liver

ஈரலில் சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமிக்கு உயிருடன் உள்ள அவரின் தாயாரது ஈரலை மாற்றி வெற்றிகரமான ஈரல் மாற்று அறுவை சிகிச்சையை, நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் சேவையாற்றுகின்ற விஷேட வைத்தியர்களின் பங்களிப்புடன் வட கொழும்பு போதனா வைத்தியசாலையில் ஈரல் மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

1 preparing the theatre for surgery day before
1 preparing the theatre for surgery day before

இச் சத்திரசிகிச்சையின் பின்னர் குணமடைந்துள்ள கிஷானு எனும் குறித்த சிறுமி ‘ எனக்கு புதிய ஈரலுடன் புதிய வாழ்வையும் வழங்கியமைக்கு நன்றி. நீங்கள் எனக்கு செய்த இந்த உபகாரத்தைப் போன்று என்னால் இயன்றதை நான் இந்த உலகிற்கு செய்வேன். தயவு செய்து என்னைப் போன்ற என்னுடைய ஏனைய நண்பர்களுக்கும் உதவி செய்யுங்கள். எமக்கு உயிர் வாழ்வதற்கான மீண்டுமொரு வாய்ப்பை ஏற்படுத்தித் தாருங்கள். ‘ என்று வைத்தியர்களிடம் மனமுருகிக் கூறியுள்ளார்

2020 ஜூலை 14 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இச் சத்திரசிச்சையை தொடர்ந்து சிறுமி மற்றும் சிறுமியின் தாயார் இருவரும் தற்போது குணமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த கிஷானு எனும் குறித்த சிறுமி, சிறுவயது முதல் ஈரல் நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். மேலும் இவரது ஈரல் அரிதான, மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.

நோய் தாக்கம் காரணமாக கடந்த ஒரு வருடத்தில் அவர் பலமுறை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளதுடன் சிறுமி உயிர்வாழ்வதற்கு அவசரமாக ஈரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அதனை மேற்கொள்ள அவர்கள் வெளிநாடுகளில் உள்ள  வைத்தியசாலைக்கு செல்லவேண்டி இருந்தது.

வறுமையில் வாடும் குடும்பத்திற்கு சிறுமியை சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வதற்கான செலவை ஈடு செய்ய முடியாததாக இருக்கவே, வைத்தியர்கள் அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர்.

இந்த சூழலில், ராகம ஈரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக வைத்தியர் வி. துஸ்யந்தன் மற்றும் யாழ்ப்பாணத்தின் போதனா மருத்துவமனை வைத்தியர் கே.அருள்மொழி ஆகியோரால் என்.சி.டி.எச் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை  சேவைக்கு குறித்த சிறுமியை பரிந்துரைத்துள்ளனர். 

அங்கு சிறுமி மற்றும் அவரின் தாயார் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆரோக்கியமான உடல் நிலையிலிருந்த 38 வயதான அவரின் தாயின் கல்லீரலில் ஒரு பகுதியை சிறுமிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது

இந்த அறுவை சிகிச்சையை பேராசிரியர் ரோஹன் சிறிவர்தனா தலைமையிலான குழு திட்டமிட்டது. அறுவைச் சிகிச்சை ஜூலை 14, 2020 அன்று மேற்கொள்ளப்பட்டது. இச் சிக்கலான அறுவை சிகிச்சை சிறுமி மற்றும் தாய்க்கு 12 மணி நேரத்திற்கும் மேலாக நிபுணர்கள்,  வைத்தியர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. 

இதனையடுத்து, ராகமவின் என்.சி.டி.எச் இல் பிரத்தியேக ஐ.சி.யூ இல்லாததால் குழந்தை ஹேமஸ் வைத்தியசாலையின் ஐ.சி.யுவில் 7 நாட்கள் தங்க வைக்கப்பட்டார்.

தற்போது சிறுமி ராகம என்.சி.டி.எச்-ல் வைத்தியசாலையில் குணமடைந்துவரும் நிலையில் இன்னும் சில நாட்களில் வீட்டிற்கு செல்ல தயாராகி வருகிறார்.

இச் சாதனையானது, பேராசிரியர் ரோஹன் சிறிவர்தன தலைமையிலான சத்திரசிகிச்சை குழு, மயக்கமருந்து குழு, சிறுவர் பராமரிப்பு குழு, கதிரியக்கவியல் குழு என 20 க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் அடங்கலாக ஏனைய சுகாதார ஊழியர்களின் உதவியுடன் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இது இலங்கையில் ஒரு குழந்தைக்கு செய்யப்பட்ட முதல் வெற்றிகரமான ஈரல் மாற்று அறுவை சிகிச்சையைாகும். இதனுடன் என்.சி.டி.எச் ஈரல் மாற்று சத்திரசிகிச்சை பிரிவு இதுவரை 50 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளது.

வைத்தியர்களின் இவ் உன்னதமான சேவைக்கு, சிறுமியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளதுடன் பலரும் பாராட்டி வருகின்றனர்.

பொதுவாக ஈரல் மாற்று சத்திர சிகிச்சையின் போது வயது வந்த ஒருவரின் 40 வீத ஈரல் பகுதியை இன்னொருவருக்கு வழங்க முடியும். இவ்வாறு அகற்றப்பட்டதும் ஈரல் பகுதி தானாகவே மீள் உற்பத்தி செய்து கொள்ளும். இதன் மூலம் சாதாரண வாழ்க்கையை அவர் வாழ முடியும்.

அதேபோல் அந்த ஈரலைப் பெற்றுக்கொண்ட குழந்தையும் வளர்ந்து வரும் போது கல்லீரல் முழு வளர்ச்சி அடைவதுடன் சாதாரண வாழ்க்கையை வாழ முடியும். 

முதியவர்கள் அல்லது வயதுடையவர்களுடன் ஒப்பிடும் போது சிறுவர்களுக்கான ஈரல் மாற்று சத்திரசிகிச்சை மிகவும் சிக்கலானதும் ஆபத்தானதுமாகும். அத்துடன் ஈரல் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான சிகிச்சைகளுக்காக வெளிநாடுகளில் 10 மில்லியன் ரூபாய் வரை செலவிட்டு செல்ல வேண்டியுள்ளது.

எனவே வடகொழும்பு வைத்தியசாலையின் ஈரல் மாற்று சத்திர சிகிச்சைப் பிரிவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதோடு மேலும் பல புதிய தொழிநுட்ப கருவிகளை வழங்குவதன் மூலம் தமது செயற்பாடுகளை இதனை விடவும் வெற்றிகரமாக முன்னெடுக்க முயும் என்று வைத்தியசாலையின் மருத்துவர் குழாம் தெரிவித்துள்ளது.