ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஊடகங்களுக்கு விடுத்துள்ள ஆணை

434eb46b44a832fec870effd10c34dc3 XL 1
434eb46b44a832fec870effd10c34dc3 XL 1

தேர்தல் காலம் நிறைவடையும் வரையில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வௌியேறும் சாட்சியாளர்களிடம் கருத்து கேட்பதை தவிர்க்குமாறு ஊடகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைமை நீதிபதியால் இந்த உத்தரவு வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் காலம் நிறைவடையும் வரையில் சாட்சியாளர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் பரிசீலனை செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கடந்த தினம் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்து கோரியிருந்தார்.

விசேடமாக தேர்தல் காலத்தில் ஆணைக்குழுவில் ஆஜராகும் சாட்சியாளர்கள் சாட்சியம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதால் வேட்பாளர்களுக்கு பாரபட்சம் ஏற்படுவதாக மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைமை நீதிபதி, சாட்சியாளர்களின் வாக்குமூலத்தை ஊடகங்களுக்கு வௌியிடுவதற்கு எவ்வித தடையும் இல்லை என ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஆணைக்குழு வளாகத்தில் இருந்து வௌியேறும் சாட்சியாளர்களிடம் கருத்து கேட்பதை தவிர்க்குமாறு ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

இந்த நடைமுறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுத் தலைவருக்கு அறிவிக்க தலைமை நீதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.