தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் வாக்களிக்க பிரத்தியேக நாள் வழங்கப்படாது

download 1 10
download 1 10

அநுராதபுரம் மாவட்டம் ராஜாங்கனை தேர்தல் பிரிவில் இன்று (29) தபால்மூல வாக்களிப்பு இடம்பெறுகின்றது.

மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 5 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறுவதாக அநுராதபுர மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ஆர்.எம்.வன்னிநாயக்க தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் வாக்களிக்க பிரத்தியேக நாள் வழங்கப்படாது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

தேர்தல் நடைபெறும் ஒகஸ்ட் 5 ஆம் திகதி மாலை 5 மணிக்கு பின்னர் அவர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கொவிட் 19 வைரசை கட்டுப்படுத்தும் ஜனாதிபதி விசேட செயலணியின் கூட்டத்தில் நேற்று (28) பங்கேற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சு வழங்கியுள்ள சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை இன்றைய தினத்திற்குள் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்ஜித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இருக்கையில் இதுவரை தேர்தலுடன் தொடர்புடைய 5400 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அனைத்து முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவங்களுடன் தொடர்புடையவை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு ஆயிரத்து 20 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அதேபோல் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு மத்திய நிலையங்களுக்கு நான்காயிரத்து 4380 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.