ஆயிரம் கிலோ உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

1 1 1 1
1 1 1 1

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஆயிரம் கிலோ உலர்ந்த மஞ்சள், மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியின் ஓலைத்துடுவாய் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இந்தத் மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்றுறுதியானவர்கள் கடல் மார்க்கமாக நாட்டுக்குள் பிரவேசிப்பதை தடுப்பதற்கும், கடற்பிராந்தியங்களில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத செயற்பாடுகளை முறியடிக்கும் நோக்கிலும் கடற்படையினர் தொடர்ச்சியாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மன்னார் – ஓலைத்தொடுவாய் கடற்கரையோரத்தில் சந்தேகத்திற்கிடமாக இருந்த பொதிகளை கடற்படையினர் நேற்று முன்தினம் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது 20 பொதிகளில் ஆயிரம் கிலோ உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண சுங்க அலுவலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், கொவிட்-19 அச்சம் காரணமாக, தனிமைப்படுத்தலுக்காக சுகாதார தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது