சர்வதேசத்துடன் சவால் விட்டால் அழிவுதான் பரிசாகக் கிடைக்கும் ரணில் கடும் எச்சரிக்கை

ranil 261018 pewrikainews
ranil 261018 pewrikainews

“சர்வதேசத்தைப் பகைத்துக்கொண்டு நாம் எதனையும் செய்ய முடியாது. உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்காவிட்டால் இறுதியில் சர்வதேசம்தான் தலையிடும். அது உலக நியதி. எனவே, சர்வதேசத்துடன் ராஜபக்ச அரசு சவால் விட்டால் நாட்டுக்கு அழிவுதான் பரிசாகக் கிடைக்கும்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

‘உள்நாட்டுப் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். சர்வதேச தலையீட்டுடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தயாரில்லை’ என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச தேர்தல் பரப்புரைகளில் தெரிவித்து வருகின்ற நிலையில், ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.  

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எமது நல்லாட்சியில் சர்வதேசம் இலங்கைக்கு எவ்வித அழுத்தங்களையும் வழங்கவில்லை. ஏனெனில் சர்வதேசத்துடன் நாம் ஒன்றித்துப் பயணித்தோம். அதேவேளை, உள்நாட்டுப் பிரச்சினைகளில் ஒரு பகுதிக்குத் தீர்வுகளைக் கண்டோம். ஏனையவற்றுக்குத் தீர்வுகளைக் காண்பதற்காகப் பேச்சுக்களை முன்னெடுத்திருந்தோம்.

ஆனால், கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் ஆட்சி மாற்றமும் நிகழ்ந்தது. அதன்பின்னர் உள்நாட்டுப் பிரச்சினைகள் தலைவிரித்தாடுகின்றன. சர்வதேச சமூகத்தின் கடுமையான அழுத்தங்களும் இலங்கைக்கு எதிராக வந்து கொண்டிருக்கின்றன.

எமது நாட்டு ஜனாதிபதியும் பிரதமரும் சர்வதேசத்துக்குப் பகிரங்கமாக சவால்களை விடுத்து வருகின்றார்கள். சர்வதேசத்தைப் பகைத்துக்கொண்டு நாம் எதனையும் செய்ய முடியாது. உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்காவிட்டால் இறுதியில் சர்வதேசம்தான் தலையிடும். அது உலக நியதி.

சர்வதேசத்துடன் ராஜபக்ச அரசு சவால் விட்டால் நாட்டுக்கு அழிவுதான் பரிசாகக் கிடைக்கும். இதை அவர்கள் தெரிந்துகொண்டும் வாக்குகளுக்காகச் சர்வதேசத்துடன் முட்டி மோதுகின்றார்கள்.

ராஜபக்சக்களின் இந்த ஆட்சி தொடர்ந்தால் நாட்டுக்குத்தான் அழிவு. எனவே, ஆட்சி மாற்றம் வேண்டும். மீண்டும் எமது நல்லாட்சி வேண்டும். பொதுத்தேர்தலில் அதற்கான ஆணையை நாட்டு மக்கள் தருவார்கள் என்றே நம்புகின்றோம்” – என்றார்.