பிற நாட்டவருக்கு தேசிய வளங்களை தாரைவார்க்கும் கொள்கை எமக்கு கிடையாது : மஹிந்த!

1 2 3
1 2 3

“தேசிய வளங்களை பிற நாட்டவருக்கு தாரைவார்க்கும் கொள்கை எமக்கு கிடையாது. எதிர்கால தலைமுறையினருக்காக தேசிய வளங்கள் பாதுகாக்கப்படும். அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்றவர்களையும் அதற்கு துணை நின்றவர்களையும் இம்முறை பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டாம். நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு வாக்குரிமையை முறையாக பயன்படுத்த வேண்டும்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை- ஹூங்கம பிரதேசத்தில் இன்று இடம் பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“ஸ்ரீ லங்கா பொதுஜனபெரமுன தலைமையிலான புதிய அரசாங்கத்தில் சமுர்த்தி பயனாளர்களுக்கு வழங்கப்படும் மாத கொடுப்பனவுகள் நிறுத்தப்படும் என எதிர் தரப்பினர் அரசியல் பிரசாரங்களை முன்னெடுக்கிறார்கள். மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை ஒருபோதும் நாங்கள் இல்லா தொழிக்கமாட்டோம்.

தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு தாரைவார்க்கும் கொள்கை எமக்கு கிடையாது. கடந்த அரசாங்கம் தேசிய வளங்களை பாதுகாப்பதற்கு எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை. அரசியல் தேவைகளுக்காக தேசிய வளங்கள் பிற நாட்டவர்களுக்கு தாரைவார்க்கப்பட்டது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்றவர்களையும் அதற்கு துணை நின்றவர்களையும் இம்முறை பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டாம். தேசிய வளங்கள் விற்கப்படும் போது அதற்கு எதிராக பாராளுமன்றத்தில் தைரியமாக எதிர்ப்பு தெரிவிக்கும் நபருக்கு அதிகாரத்தை வழங்குங்கள்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாட்டில் பலம்மிக்க பிரதான அரசியல் கட்சியாக உள்ளது. ஆகவே பொதுத்தேர்தலில் விருப்பு வாக்கினை மொட்டுச்சின்ன வேட்பாளருக்கு வழங்குங்கள் என்ற கோரிக்கையினை முன்வைக்கிறேன். ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் கொள்கைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கியதை போன்று அவர் தலைமையிலான கட்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தை எமது ஆட்சியில் முழுமையாக செயற்படுத்துவோம். ஜனாதிபதியுடன் இணக்கமாக செயற்படும் அமைச்சரவை அமைய வேண்டும். முரண்பாடற்ற அரசாங்கம் அமைந்தால் மாத்திரமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். ஆகையால் பொதுஜன பெரமுனவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை வழங்குங்கள்” என வலியுறுத்தியுள்ளார்.