இந்த தேர்தல் மிகவும் சவாலான ஒரு தேர்தல் என்பதை யாரும் மறுக்க முடியாது

Rathakrishnan 01
Rathakrishnan 01

என்றுமே அசைக்க முடியாத கூட்டணி தமிழ் முற்போக்கு கூட்டணி என்பதை மீண்டும் ஒரு முறை மக்கள் நிரூபித்திருக்கின்றார்கள். எங்களுடைய சேவைகளை மக்கள் அங்கீகரித்து வாக்களித்திருக்கின்றார்கள் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கூறியுள்ளார்.

தேர்தல் வெற்றியின் பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சியில் இருந்து கொண்டு தேர்தலை சந்திப்பது என்பது மிகவும் சவாலான ஒரு விடயம். அதிலும் வெற்றி பெறுவது என்பது இன்னும் கடினமான ஒரு விடயம். ஆனாலும் எங்களுடைய மக்கள் மிகவும் தெளிவாக சிந்தித்து வாக்களித்திருக்கின்றார்கள். எங்களுடைய மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்கள் நாங்கள் என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்

இந்த தேர்தல் மிகவும் சவாலான ஒரு தேர்தல் என்பதை யாரும் மறுக்க முடியாது. கடந்த 2015 ஆம் ஆண்டு நாங்கள் ஆளும் கட்சியில் இருந்து கொண்டு தேர்தலை சந்தித்தோம். அன்று எங்களுடைய ஜனாதிபதி பிரதமர் ஆட்சியில் இருந்தார்கள். ஆனால் இந்த தேர்தல் முற்றாக மாறுபட்ட ஒரு தேர்தல்.

தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக மீண்டும் ஆறு (6) உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை எங்களுடைய கூட்டணியின் பலம் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் எத்தனை விருப்பு வாக்குகள் பெற்றுக் கொண்டோம் என்பதை விட எத்தனை உறுப்பினர்களை எங்களுடைய சமூகம் சார்பாக பாராளுமன்றத்திற்கு அழைத்து செல்கின்றோம் என்பதே மிகவும் முக்கியமாகும்.

அந்த வகையில் நாங்கள் ஒற்றுமையாக செயற்பட்டதன் காரணமாக எங்களுடைய அனைத்து உறுப்பினர்களும் வெற்றி பெற்றிருக்கின்றார்கள். எனவே ஒற்றுமையாக செயற்படுவதை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

ஏதிர்காலத்தில் நாங்கள் ஒற்றுமையாக செயற்பட வேண்டியது கட்டாயமாகும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்