தமிழ்த் தேசிய அரசியலை நெருக்கடியில் இருந்து மீட்பது எப்படி? விளக்குகிறார் குருபரன்

guruparan
guruparan

போருக்குப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியல் தேர்தல் பரப்பில் பெரும் நெருக்கடியை சந்தித்து நிற்கிறது என்று கலாநிதி குமாரவடிவேல் குருபரன் சுட்டிக் காட்டியுள்ளார்.

தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு அவர், தனது சமூகவலைத்தளத்தில் 6 முக்கிய அம்சங்களை உள்ளடக்கி ஒரு பதிவை இட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய அரசியலின் நெருக்கடி – வீழ்ச்சிக்கு மத்தியில் தமிழ்த் தேசிய அரசியலை எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அவர் முன்வைத்துள்ள விடயங்கள் வருமாறு,

  1. கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் ஆசன இழப்பு, மட்டக்களப்பில் பிள்ளையான், வியாழேந்திரனின் வெற்றி ஆகியன கிழக்கில் தமிழ் தேசிய வெளி சுருங்குவதை காட்டுகின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றன. தமிழரசின் சார்பில் மட்டக்களப்பில் தெரிவான சாணக்கியன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வந்த ‘ஆதரவுத் தள அரசியலை’ (patronage politics) செய்யும் அரசியல் ஒழுக்கத்திற்கு உரியவர் என்பதையும் கவனிக்க வேண்டும்.
  2. யாழ்ப்பாணத்தில் அங்கஜன், டக்ளசின் கூட்டு பெற்றுக் கொண்ட ஒரு லட்சத்தை நெருங்கிய வாக்குகள் மக்களின் இந்த ‘ஆதரவுத் தள அரசியலை’ நோக்கிய ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றது. இந்த தேவையை கொச்சைப்படுத்த முடியாது. விளங்கிக் கொள்வது அவசியமானது. உரிமையா சலுகையா என இரு துருவப்படுத்தி இனியும் பேச முடியாது.
  3. நான் பிள்ளையான், வியாழேந்திரன், அங்கஜன், டக்கிளஸ் அரசியலை ‘ஆதரவுத் தள அரசியல்’ (patronage politics) என வகைப்படுத்துவதற்கு காரணம் உள்ளது. அவர்கள் செய்வது அபிவிருத்தி அரசியல் அல்ல. அபிவிருத்தி என்பதற்கு ஆழமான புரிதலும் செயற்பாடும் தேவை. ஆதரவுத் தள அரசியல் என்பது தம் ஆதரவாளர்களை திருப்திப்படுத்துவதற்காக அங்கொரு வேலை இங்கொரு வேலை பெற்றுக் கொடுத்தல், மின்சார இணைப்பு பெற்றுத் தருதல், வீட்டுத் திட்டத்திற்கு சிபாரிசு செய்தல் – இப்படியான செயற்பாடுகள் மூலம் தமது ஆதரவுத் தளத்தை தக்க வைத்தல் எனப் பொருள் கூறலாம். ஒரு விதத்தில் பழைய ‘நல்ல ஜமீன்’ அரசியல் போன்றது. இந்த ஆதரவு தளத்தை தக்க வைத்து அரசியல் செய்வது, அதிகாரத்தில் இருப்பது, வியாபாரம் செய்வது தான் இவர்களின் பிரதான நோக்கம். தமிழ் தேசிய கட்சிகள் இதனைப் பிறந்து செய்யாது
    இதனைத் தாண்டி வரலாம், வர வேண்டும். நிலைத்தகு அபிவிருத்தி பார்வையில் அரசுக்கு வெளியில் கூட தீர்க்கமாக செயற்படலாம். இனியாவது அமைப்பாய் திரள எமது தலைமைத்துவங்கள் முன்வர வேண்டும்.
  4. ஒரு தசாப்பதத்தின் பின்னரான கஜேந்திரகுமார் அண்ணனின் பாராளுமன்ற மீள் நுழைவு தமிழ் தேசிய அரசியலில் கடந்த 10 வருடங்களாக கூட்டமைப்பிடமிருந்த ஏகபோகத்தை உடைத்துள்ளது. அரசியலை மக்கள் மயப்படுத்தவும் மக்களுக்கு பொறுப்பு சொல்ல மற்றயவர்களையும் இந்த உடைப்பு உதவும் என நான் நம்புகிறேன். பொறுப்புக் கூறலுக்கு கஜேந்திரகுமாரும் விலக்கு இல்லை. கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்போம். தேவையான போது பொது வெளியிலும் பேசுவோம்.
  5. அரசியல் தீர்வு விடயத்தில் கஜேந்திரகுமார் அண்ணன், சுமந்திரன் சேர், விக்கினேஸ்வரன் ஐயா ஆகியோர் உட்கார்ந்து செயன்முறை தொடர்பில் பேச வேண்டும். யார் பேச்சுவார்த்தை என்று வந்தால் பிரதிநித்துவப்படுத்துவது, பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு போகும் விஷயத்தை எவ்வாறு தீர்மானிப்பது போன்ற விடயங்களிற்கு ஓர் சட்டகத்தை பகிரங்கமாக முன்வைத்து மக்களின் உள்ளீடுகளையும் பெற்று நகர வேண்டும். நான் சொல்லும் சட்டகம் செயன்முறை தொடர்பானது. செயன்முறையில் தெளிவு இருந்தால் உள்ளடக்கத்தை அடைவது ஒப்பீட்டளவில் இலகுவானது.
  6. கஜேந்திரகுமார் அண்ணாவை எமது அயலுறவு தொடர்பான விடயங்களில் கூடுதல் தலைமைத்துவத்தை வழங்கி செயற்பட வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன். அது தொடர்பில் தெளிவான நிலைப்பாடுகளை பொது மக்கள் கலந்துரையாடல்கள் தெளிவுபடுத்தல்கள் மூலமாக பொது அரங்கிற்கு கொண்டு வர வேண்டும்.

போருக்குப் பின் தமிழரசியலின் போக்கை தீர்மானிக்க நல்ல சந்தர்ப்பம் இது. எமது மக்களின் அரசியலை எம்மளவில் முன்நகர்த்த நாம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து செயலாற்ற ஓர் அரிய வாய்ப்பு.