தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விஷேட கலந்துரையாடல்!

slfp 800x447 1
slfp 800x447 1

பொதுத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முக்கியஸ்தர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நேற்று சனிக்கிழமை கொழும்பு – டார்லி வீதியில் அமைந்துள்ள சுதந்திர கட்சி தலைமையகத்தில் விஷேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

கட்சி தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர , நிமல் சிறிபால டி சில்வா , துமிந்த திஸாநாயக்க , மஹிந்த அமரவீர , ரஞ்சித் சியம்பலாப்பிட்டி, லசந்த அழகியவண்ண மற்றும் ஷாந்த பண்டார உள்ளிட்ட வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பலரும் ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

கலந்துரையாடல் நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – பொதுஜன பெரமுன இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிட்டு பாரிய வெற்றியைப் பெற்றுக் கொண்டுள்ளது. பொது ஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட்டிருந்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 14 பேர் வெற்றி பெற்றுள்ளனர். வடக்கிலும் அதிக விருப்பு வாக்குகளுடன் சுதந்திர கட்சி சார்பில் போட்யிட்ட வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் எமது வெற்றியுடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது வழிகாட்டலில் அரசாங்கத்தின் அனைத்து முன்னெடுப்புக்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளோம். இது தொடர்பிலான கலந்துரையாடலே இன்றைய தினம் (நேற்று) கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

அவரது வழிகாட்டலின் கீழ் எமது வாக்குறுதிகளை ஏற்று எமக்கு ஆட்சியமைப்பதற்காக ஆணையை வழங்கிய பொது மக்களின் எதிர்பார்ப்புக்கள் எவ்வித பேதமும் இன்றி நிறைவேற்றப்படும். எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு சிறப்பானதொரு ஆட்சி மக்கள் பலத்துடன் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.