பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை

110502913 3937113f ebc6 4087 9cd9 cfbe8e1ccaf2
110502913 3937113f ebc6 4087 9cd9 cfbe8e1ccaf2

தேர்தல் வரலாற்றில் இதுவரையான அதிக விருப்பு வாக்குகளான 5 இலட்சத்து 27 ஆயிரத்து 364 விருப்பு வாக்குகளை பெற்றுக் கொடுத்து 2020 பொதுத் தேர்தலில் என் மீது கொண்ட நம்பிக்கைக்கு எனது அன்பார்ந்த குருநாகல் மக்களுக்கு முதலாவதாக எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

அத்துடன் எனக்கு ஒரு வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுப்பதற்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும், கூட்டங்களை ஏற்பாடு செய்து பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்ட அனைத்து அமைப்பாளர்களுக்கும், இரவும் பகலும் கடுமையாக உழைத்த ஆதரவாளர்களுக்கும், ஏற்பாடுகளை செய்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கின்றேன்.

வரலாற்று வெற்றி பெற்ற 2020 பொதுத் தேர்தல், எனது ஐம்பது ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் நான் போட்டியிட்ட ஒன்பதாவது பொதுத் தேர்தலாகும். எனது அரசியல் வாழ்க்கையில் மிகவும் கடினமான மற்றும் சவாலான காலகட்டத்திலேயே நான் நான்கு வரலாற்று இராச்சியங்களை கொண்ட குருநாகல் மாவட்டத்தில் இருந்து முதன்முறையாக பொதுத் தேர்தலில் போட்டியிட்டேன். 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் என் மீது கொண்டிருந்த எல்லையற்ற நம்பிக்கை இம்முறை 2020 பொதுத் தேர்தலில் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதை நான் நன்றியுடன் நினைவில் கொள்கிறேன்.

குருநாகல் மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து சமீபத்தில் கவனத்தில் கொண்டிருந்தோம். அப்பிரச்சினைகளை மற்றொரு தேர்தலில் அரசியல் வாக்குறுதிகளாக மாற்ற அனுமதிக்காமல் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் நான் உள்ளிட்ட அரசாங்கம் எதிர்வரும் காலத்தில் நடவடிக்கை எடுப்போம்.

இனிமேல் எனக்கு மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. எனக்கு பெரும்பான்மை விருப்பு வாக்குகளை வழங்கிய குருநாகல் மக்கள் மாத்திரமன்றி இலங்கை மக்கள் அனைவரும் எதிர்பார்த்த வளமான மற்றும் அமைதியான நாட்டை உருவாக்குவதற்கான பொறுப்பு இப்போது எங்களுக்கு உள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தை செயற்படுத்தி இந்நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், பாதுகாப்பதற்கும் பணியாற்றுவேன் என்று நான் பொறுப்புடன் கூறுகின்றேன். ஒரு கூட்டு அபிவிருத்தி செயல்முறை இங்கிருந்து ஆரம்பமாகிறது. இந்த அபிவிருத்திச் செயற்பாட்டில் கட்சி நிற பாகுபாடின்றி இலங்கையர்கள் என்ற ரீதியில் உங்கள் அனைவரதும் பங்களிப்பை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். வேலை செய்வதற்கான காலம் தற்போது எழுந்துள்ளது.