யாழ்ப்பாணத்தில் மீண்டும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் இராணுவம்!

poinpitro
poinpitro

யாழ்ப்பாணத்தில் இராணுவம் மீண்டும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இன்று அதிகாலை கீரிமலை பிரதேசம் இராணுவ சுற்றிவளைப்புக்கு உள்ளானது. வீடு வீடாக சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினருடன் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரும் சென்றிருந்தார்.

அப்பகுதியின் வீடுகளுக்கு சென்ற இராணுவத்தினர் வீட்டிலிருந்த அனைவரையும் வெளியில் அழைத்து அவர்களின் அடையாள அட்டையை பரிசோதனை செய்தனர்.

பின்னர் ஒரு சிப்பாய், பொலிஸ் உத்தியோகத்தர், குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்று வீடு முழுவதும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

வீட்டில் இருந்த அனைவரின் விவரங்களையும் பதிவு செய்த இராணுவத்தினர், முன்னாள் போராளிகள் இருக்கிறார்களா என்று விசாரித்தனர். அவர்களின் விவரங்களையும் தனியாகப் பதிவு செய்து சென்றனர்.

இந்தத் திடீர் சுற்றி வளைப்புக்கான காரணம் குறித்துத் தெரிய வரவில்லை.

இதேவேளை, நேற்று சனிக்கிழமை கொக்குவில், கோண்டாவில் பிரதேசங்களில் முன்னாள் போராளிகளின் வீடுகளுக்கு சென்ற இராணுவத்தினர் அவர்கள் அங்குதான் வசிக்கின்றனர் என்பதை உறுதி செய்து சென்றனர்.

மேலும், இந்த நடவடிக்கையில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

எனினும், போர் காலத்தில் இடம்பெற்றது போன்று ஒரு பிரதேசத்தை முழுமையாக சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டமை கீரிமலை சம்பவமே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.