நியமனத்தில் தமிழ் பட்டதாரிகளுக்கு அநீதி! – எடுத்துரைப்பார்களா தமிழ் எம்பிக்கள்?

Wani 10 April Graduates 123RF 700x420 1

50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் திட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் பணிப்பின் பேரில் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலை வழங்கும் திட்டத்தில், தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டன.

இதில் சுமார் 1500 தமிழ் பட்டதாரிகளின் விண்ணங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கற்கை நெறியை இலங்கையில் பூர்த்தி செய்தமைகாக இவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எனினும் இலங்கை பல்கலைகக்கழக மானியங்கள் ஆணைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களிலேயே இவர்கள் பட்டப் படிப்பை நிறைவு செய்துள்ளனர்.

அத்துடன் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு இப் பட்டப் படிப்பை அங்கீகரித்து சான்றிதழ்களை வழங்கியுள்ள போதும் இவ்வாறு நிராகரிப்பது ஏற்புடையதல்ல என்று பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் கூறுகின்றனர்.

பெரும் எதிர்பார்ப்புக்களின் மத்தியில் பல்வேறு சவால்களின் மத்தியில் தாம் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள நிலையில் இவ்வாறு புறக்கணித்து அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே ஜனாதிபதி கோட்டபாய இந்த விடயம் தொடர்பில் கரிசனை கொண்டு பாதிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கும் எதிர்வரும் செப்டம்பர் 2ஆம் திகதி வேலையில் இணைய வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அமைச்சர்கள் இந்த விடயம் தொடர்பில் அரசுக்கு சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட தமிழ் பட்டதாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.