யாழில் மனித எலும்புக்கூடுகள் காணப்பட்ட பகுதிகளில் அகழ்வு பணிகள் ஆரம்பம்- ஊடகவியலாளர்களுக்கு தடை

bone

யாழ்ப்பாணம்- கொட்டடியில் மனித எலும்புக்கூடுகள் காணப்பட்ட பகுதிகளில் அகழ்வு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆனாலும் குறித்த  அகழ்வு பணிகள் தொடர்பாக படமெடுப்பதற்கோ அல்லது தகவல் சேகரிப்பதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம்- கொட்டடிப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர்  மனித எலும்புக்கூடு  மீட்கப்பட்டது.

யாழ்ப்பாணம், கொட்டடி மீனாட்சி அம்மன் ஆலய வீதிப்பகுதியில் தனியார் காணியொன்றில் கொட்டகை அமைப்பதற்காக நிலத்தை தோண்டியபோதே இவ்வாறு மண்டையோடு, எலும்புத் துண்டுகள் மற்றும் பெண்கள் அணியும் ஆடை ஆகியன  மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியானது கடந்த 2006ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே இவ்விடயம்  தொடர்பாக நீதிமன்றத்தில் பொலிஸார் அறிக்கை சமர்ப்பித்து,  இன்று அகழ்வு பணிகள் மேற்கொள்வதற்கு அனுமதி  பெற்றனர்.

அதனடிப்படையில் தற்போது சட்ட வைத்திய அதிகாரி மற்றும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் அகழ்வு பணிகள் இடத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.