ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் புதிய வரவு- செலவு திட்டம்

download 16 1
download 16 1

இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் புதிய வரவு- செலவு திட்டம் உருவாக்கப்படுமென  நிதி மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறியுள்ளதாவது, “புதிய நடைமுறைகள்  மற்றும் வழக்கமான நடைமுறைக்கு ஏற்ப வரைவு செய்யப்பட்டு  புதிய வரவு- செலவுத்திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.

அதாவது, முதல் கட்டமாக, நிதி அமைச்சு புதிய வரவு- செலவுத்திட்டம்  குறித்த சுற்றறிக்கையை வெளியிடும். மேலும், அவற்றின் கீழ் செயற்படும் துறைகள் மற்றும் முகவர் நிறுவனங்களின் உதவியுடன் அமைச்சுகள் வருவாய் மற்றும் செலவின மதிப்பீடுகளைத் தயாரிக்கும்.

நிதி ஆணையகம், அதன் அரசியலமைப்பு ஆணைப்படி, மாகாண சபைகளுக்கு ஒதுக்கீடு செய்ய பரிந்துரைத்து, அவற்றை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கும்.

அதனைத் தொடர்ந்து மதிப்பீடுகள் அரசாங்கத்தின் கொள்கை மற்றும் முன்னுரிமைகளுக்கு இணங்குவதற்காக நிதி அமைச்சும் ஏனைய அமைச்சுகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி, பின்னர் ஆய்வு  மற்றும் ஒப்புதலுக்காக அமைச்சரவையில் குறித்த  அறிக்கையை சமர்ப்பிக்கும்.

இறுதி மதிப்பீடுகள் அரசாங்க வரவு செலவுத் திட்டத்திற்கான உபரி அல்லது பற்றாக்குறையை வெளிப்படுத்தும். இந்த மதிப்பீடுகள் நிதி அமைச்சரால் வரவு- செலவு திட்டத்தின் முதல் வாசிப்பான ஒதுக்கீட்டு  சட்டமூலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

இந்த வருடத்தில் ஒக்டோபர் மாத தொடக்கத்தில் ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நிதி அமைச்சர் முன்வைத்து, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதும், அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்பது பொது நடைமுறை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.