ரஞ்ஜனுக்கு எதிரான மேலதிக விசாரணைகள் நாளை (25) வரை ஒத்திவைப்பு

ranjan.ramanayake.1
ranjan.ramanayake.1

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான வாய்மூல சமர்ப்பணங்கள் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் இன்று (24) முன்வைக்கப்பட்டன.

சிசிர டி ஆப்ரூ, விஜித் மலல்கொட மற்றும் ப்ரீதி பத்மன் சூரசேன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த வாய்மூல சமர்பணங்கள் முன்வைக்கப்பட்டன.

இதன் போது பிரதிவாதியான ரஞ்ஜன் ராமநாயக்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் வாய்மூல சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

உயர்நீதிமன்றத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதன் பிரகாரம், அது குறித்த நீதிமன்றம் அல்லது நீதிபதிக்கு நேரடியாக இழைக்கப்பட்ட அவமதிப்பு மாத்திரம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், பிரதிவாதியான ரஞ்ஜன் ராமநாயக்க நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ள விளக்கத்தின் ஊடாக உயர் நீதிமன்றத்திம் அல்லது சம்பந்தப்பட்ட நீதியரசர் தொடர்பில் எந்தவிடயமும் தெரிவிக்கப்படவில்லை என கூறினார்.

அதனால் குறித்த மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றத்திற்கு முடியாது எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினராக ரஞ்ஜன் ராமநாயக்க பொதுவான கருத்து ஒன்றையே கூறியதாக மன்றில் தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், அவரின் நோக்கம் நீதிபதிகளை குறைகூறுவது அல்ல எனவும் மாறாக வழக்கின் அடிப்படை அறிக்கைக்கு அமைய அப்போதைய நீதி அமைச்சரின் பங்கை விமர்சிப்பதே ஆகும் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் மன்றில் தெரிவித்தார்.

அதன்படி, தனது கட்சிக்காரரர் ரஞ்ஜன் ராமநாயக்க நீதிமன்றத்திற்கு எதிரான அவமதிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என கோரியதன் மூலம் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எந்த வகையிலும் நிரூபிக்கப்படவில்லை எனவும் கூறினார்.

அதன்பிறகு மேலதிக விசாரணைகள் நாளை (25) வரை ஒத்திவைக்கப்பட்டதுடன் மேலும் அரசாங்கத்தின் மேலதிக சொலிசிட்டர் நாயகம் சரத் ஜயமன்ன நாளை மன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்கப்படவுள்ளது