சமுர்த்தி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வழங்கிய ஆலோசனை

4b1be870 gotabhaya rajapaksa

வறுமைக் கோட்டில் வாழும் மக்களை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு சமுர்த்தி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை கூறினார்.

சமுர்த்தி, வதிவிட பொருளாதார, நுண் நிதி, சுயதொழில், வியாபார அபிவிருத்தி மற்றும் குறைவான பயன்பாட்டையுடைய அரச வளங்களை அபிவிருத்தி செய்வதற்கான இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, சமுர்த்தி உதவி திட்டம் நாட்டுக்கு சுமையாக இராமல் குறைந்த வருமானம் பெறும் மக்களை பலப்படுத்தும் திட்டமாக அமைய வேண்டும் என பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறைந்த வருமானம் பெறுவோருக்கு புதிய வருமான வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமே அவர்களை கூடுதல் வருமானம் பெறுபவர்களாக்க முடியும் என்பதோடு வறுமையை ஒழிக்கும் திட்டமாக சமுர்த்தி செயற்றிட்டத்தை செயற்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சில காலமாக இந்த சமுர்த்தி வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. 2015 ஆம் ஆண்டளவில் அதில் மாற்றத்தை ஏற்படுத்தி மக்களை பலப்படுத்தும் முறைமையை உருவாக்கினோம். எனினும், கடந்த சில வருடங்களில் அது வேறு திசைக்கு மாறியுள்ளது. சமுர்த்தி ஊடாக நாம் எதிர்பார்த்த இலக்குகள் எட்டியுள்ளனவா. இதனூடாக வறுமையிலிருந்து மக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளனரா. வறுமையிலிருந்து எத்தனை பேர் மீண்டுள்ளனர். இல்லாவிடில் வறுமை அதிகரித்துள்ளதா என்பது ஆராயப்பட வேண்டும்.

என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது குறிப்பிட்டுள்ளார்.