யாசகம் செய்த கோடீஸ்வரர் திருட்டில் வசமாக சிக்கினார்

625.500.560.350.160.300.053.800.900.160.90 3 6
625.500.560.350.160.300.053.800.900.160.90 3 6

கொச்சிக்கடை தேவாலயத்துக்கு அருகில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோது, தள்ளுவண்டியை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மஹரகம, பமுனுவ பிரதேசத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர் எனத்  தெரியவந்துள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

64 வயதுடைய குறித்த நபருக்கு சொகுசு மாடியைக் கொண்ட வீடொன்றும், அவ்வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சொகுசு காரொன்று உள்ளிட்ட இரு கார்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.  

அத்தோடு குறித்த நபர், அவரது வீட்டில் மேல் மாடியை வாடகைக்கு விட்டு மாதாந்தம் 30 ஆயிரம் ரூபாவை சம்பாதிக்கும் அதேவேளை, யாசகத்தின் மூலம் தினமும் 5 ஆயிரம் ரூபாவை சம்பாதித்து வருகின்றார் எனவும் தெரியவந்துள்ளது.

கொழும்பு, கொச்சிக்கடை, ஜம்பட்டா வீதியில் 20 ஆயிரம் ரூபா பெறுமதியான பழங்களுடன் தள்ளுவண்டியொன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணை மேற்கொண்ட பொலிஸார், சி.சி.ரி.வி. கமராவின் உதவியுடன் நேற்று முன்தினம் குறித்த நபரைக் கைதுசெய்திருந்தனர்.

குறித்த வீடியோ காட்சியில், திருடப்பட்ட தள்ளுவண்டியை அவர் தள்ளிச் செல்வது கண்டறியப்பட்டதோடு, இதனைத் தொடர்ந்து அவர் குறித்த தேவாலயத்துக்கு அருகில் தினமும் யாசகம் செய்வதையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த தள்ளுவண்டியை சிறிய தூரத்துக்குத் தள்ளிச் சென்ற அவர், நபரொருவருக்கு 5 ஆயிரம் ரூபாவைக் கொடுத்து தனது வீட்டுக்குக் கொண்டு சென்றுள்ளமை வீடியோ காட்சியில் தெரிய வந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.