வெளிநாட்டு பட்டதாரிகளின் மேன்முறையீடுகளும் பரிசீலிக்கப்படும்;டக்ளஸ்

3820e6a49232e65f678928ba5e4885f4 XL
3820e6a49232e65f678928ba5e4885f4 XL

பல்கலைக் கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் ஆங்கீகாரத்தினைப் பெற்ற வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளுக்கும் மேன்முறையீடுகளை மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த மேன்முறையீடுகளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பட்டதாரிகள் நியமனத்தின் போது வடக்கு மாகாணத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளில் ஒரு பகுதியினர் வவுனியா றோயல் விடுதி மண்டபத்தில் இன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர்  குறித்த விடயத்தினை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே, கடந்த அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளும் மேன்முறையீட்டினை மேற்கொள்ள முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், பிரதேச செயலகங்களினால் விநியோகிக்கப்படும் மேன்முறையீட்டு படிவங்களில் வெளிநாட்டு நாட்டு பட்டதாரிகள் தொடர்பி்ல் குறிப்பிடப்படாத நிலையில், சேமலாப நிதி கணக்கினை கொண்டிருப்பவர்கள் என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டவர்கள் மாத்திரமே மேன்முறையீடு மேற்கொள்ள முடியும் என்று பிரதேச செயலக அதிகாரிகளினால் தெரிவிக்கப்படுவதாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

இந்நிலையில் சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் தொடர்பு கொண்ட அமைச்சர், கடந்த வாரம் அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை உறுதிப்படுத்தியதுடன், வெளிநாட்டு பட்டதாரிகளின் மேன்முறையீடுகளையும் ஏற்றுக் கொள்ளுமாறு பிரதேச செயலாளர்களுக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளூடாக அறிவுறுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.