‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கூற்றுக்கான விளக்கத்தை தெரியப்படுத்த வேண்டும் :எம்.பி முஜுபூர் ரஹ்மான்!

img 6198
img 6198

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கூற்றுக்கான விளக்கத்தை அரசாங்கம் நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹ்மான் , இனவாத நோக்கிலா அரசாங்கம் இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றது என்று தங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ‘ஒரே நாடு ஒரே சட்டம் ‘ என்ற கூற்றை தெரிவித்து வருகின்றார். இந்த கூற்றிற்கான விளக்கம் என்ன என்பதையும் அவர் நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதுவரை காலமும் நாட்டில் ஒரே சட்டமே காணப்படுகின்றது. சிங்கள , தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவருமே இந்த சட்டத்திற்கு கட்டுப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜனாதிபதி எந்த சட்டத்தை கூறுகின்றார் என்பது தொடர்பில் தெளிவில்லாமல் இருக்கின்றது.

ஒவ்வொரு இனத்தவர்களுக்கும் அவர்களது கலாசார ரீதியிலான சட்டத்திட்டங்கள் காணப்படுகின்றன. இந்த சட்டங்களால் நாட்டுக்கோ , மக்களுக்கோ எவ்வித பாதிப்புகளும் ஏற்பட வில்லை. இதுபோன்ற கலாச்சார பண்புகளை உள்ளடக்கிய சட்டங்கள் காணப்படுவது இலங்கையில் மாத்திரமல்ல பாக்கிஸ்தான் , சிங்கப்பூர் , பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளிலும் காணப்படுகின்றன. இந்நிலையில் நாட்டில் அரசியலமைப்பு ஒன்று உள்ளது. அதற்கமையவே அனைவரும் செயற்பட்டு வருகின்றோம்.

அரசாங்கம் மக்களை கவர்வதற்காகவே இதுபோன்ற கருத்துகளை தெரிவித்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.